தொழில் அதிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி


தொழில் அதிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் செல்போன் எண்ணை முடக்கி தொழில் அதிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் செல்போன் எண்ணை முடக்கி தொழில் அதிபரிடம் ரூ.13½ லட்சம் மோசடி செய்யப்பட்டது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செல்போன் எண் முடக்கம்

கோவை சிங்காநல்லூர் வசந்தா நகரை சேர்ந்தவர் நித்யானந்தன்(வயது 51). தொழில் அதிபர். இவர் தனது செல்போன் எண்ணில் 2 வங்கி கணக்குகளை இணைத்து உள்ளார். இந்நிலையில் கடந்த 31-ந் தேதி அவரது செல்போன் எண் திடீரென முடக்கப்பட்டது. மறுநாள்தான், அந்த எண் மீண்டும் இயங்க தொடங்கியது.

இதற்கிடையில் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.13½ லட்சம் எடுக்கப்பட்டு உள்ளதாக குறுந்தகவல் வந்தது. அவரது செல்போன் எண்ணை முடக்கிய மர்ம ஆசாமி, ஆன்லைன் பண பரிமாற்றம்(ஆர்.டி.ஜி.எஸ்.) மூலமாக பணத்தை எடுத்து நூதன மோசடியை அரங்கேற்றியுள்ளார்.

தொலைந்து போனதாக இ-மெயில்

இதை அறிந்து அதிர்ச்சியடைந்த நித்யானந்தன், கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த மோசடி எப்படி நடைபெற்றது என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி கூறும்போது, முதலில் தொழில் அதிபரின் செல்போன் எண்ணை முடக்கி, அந்த எண் கொண்ட சிம்கார்டு தொலைந்துவிட்டதாகவும், உடனடியாக மாற்று சிம்கார்டு கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறும் சம்பந்தப்பட்ட சிம்கார்டு நிறுவனத்துக்கு இ-மெயில் அனுப்பி உள்ளனர். பின்னர் அதே எண் கொண்ட சிம்கார்டை உடனடியாக பெற்று ஆர்.டி.ஜி.எஸ். மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து மோசடி செய்துள்ளனர் என்றார்.இந்த மோசடி சம்பவம் கோவையில் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story