40 நாட்களில் குலை நடுங்க வைக்கும் 13 கொலைகள்


40 நாட்களில் குலை நடுங்க வைக்கும் 13 கொலைகள்
x

40 நாட்களில் குலை நடுங்க வைக்கும் 13 கொலைகள்

திருப்பூர்

திருப்பூர்

மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உயிருக்கும் கேடு என்று மதுபாட்டில்களில் எச்சரிக்கை வாசகம் போடப்பட்டு இருந்தாலும் மதுவுக்கு மயங்காதவர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மதுவால் வாய்த்தகராறு ஏற்பட்டு வந்த காலம் மாறிப்போய் கொலைக்கு மூலகாரணியாகவே மாறிவிட்டது. மது குடிப்பவர்களை தட்டிக்கேட்டதால் பல்லடத்தில் 2 பெண்கள் உள்பட 4 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்லடம் அருகே கள்ளக்கிணறு குறைத்தோட்டத்தை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 49). கடந்த 3-ந் தேதி இவருடைய வீட்டுக்கு செல்லும் வழிப்பாதையில் 3 பேர் மது குடித்துள்ளனர். அதை மோகன்ராஜ், அவருடைய தாயார் புஷ்பவதி, சித்தி ரத்தினம்மாள், பெரியப்பா மகன் செந்தில்குமார் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த மதுப்பிரியர்களான திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ், திருச்சியை சேர்ந்த செல்லமுத்து, தேனி உத்தமபாளையத்தை சேர்ந்த சோனைமுத்தையா ஆகியோர், 2 பெண்கள் உள்பட 4 பேரையும் வெட்டி படுகொலை செய்தனர்.

நிர்கதியான குடும்பம்

மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் ஆத்திரத்தில் அந்த இடத்தில் இருந்து சென்று அரிவாளை எடுத்து மீண்டும் அங்கு வந்து சரமாரியாக துரத்தி, துரத்தி பெண்கள் என்றும் பாராமல் வெட்டியுள்ளனர். இந்த படுகொலை சம்பவத்தை கண்டித்து மறியல் போராட்டங்கள் நடந்தன. கேட்டாலே மனதை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேர் மற்றும் வெங்கடேசின் தந்தை அய்யப்பன் ஆகிய 4 பேரை பல்லடம் போலீசார் கைது செய்தனர். விசாரணையின் போது தப்ப முயன்ற வெங்கடேசின் இரு கால் முட்டிகளிலும் துணை போலீஸ் சூப்பிரண்டு சவுமியா துப்பாக்கியால் சுட்டு பிடித்தார். மது குடிப்பதை தட்டிக்கேட்டதற்கு ஒரு குடும்பமே காலியாகி நிர்கதியாக போய்விட்டது.

சமீபகாலமாக திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதிகளில் மதுவால் கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது அதிகரித்துள்ளது. கடந்த 40 நாட்களில் 13 கொலைகள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகன் கொலை

கடந்த மாதம் 3-ந் தேதி திருப்பூர் மாநகரம் வீரபாண்டி கிருஷ்ணா நகரை சேர்ந்த தர்மராஜ் (32) என்பவர் தனது கர்ப்பிணி மனைவியிடம் மதுபோதையில் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டையால் மனைவியின் வயிற்றில் அடிக்க சிசு இறந்து விட்டது. வீரபாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.

ஊத்துக்குளி அருகே முதலிபாளையம் சிட்கோ பகுதியில் நாமக்கல் மாவட்டம் துறையூரை சேர்ந்த செல்வராஜ் (60), மனைவி சாந்தாமணி (50), மகன் மணிகண்டன் (26) ஆகியோர் வசித்து வந்தனர். மணிகண்டனுக்கு மதுப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் குடிப்பதற்கு பணம் கேட்டு பெற்றோரை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். ஒருகட்டத்தில் கோபத்தின் உச்சிக்கு சென்ற செல்வராஜ் கடந்த மாதம் 10-ந் தேதி தனது மனைவியுடன் சேர்ந்து வீட்டுக்கு முன்பு கத்தியால் தனது மகனை குத்திக்கொலை செய்தார். மதுவால் மகனின் கொடுமையை சகிக்க முடியாமல் பெற்றோரே கொலை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தம்பதியை ஊத்துக்குளி போலீசார் கைது செய்தனர்.

நண்பர் கொலை

தாராபுரம் கொண்டரசம்பாளையத்தை சேர்ந்த பழனிசாமி (63) விவசாயி. இவருடைய தம்பி ஈஸ்வரமூர்த்தி (60). இவர்களுக்குள் சொத்து தகராறு இருந்துள்ளது. இந்தநிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி பழனிசாமி இரும்பு கம்பியால் தனது தம்பி ஈஸ்வரமூர்த்தியை தாக்கி கொலை செய்தார்.

இதுபோல் திருப்பூர் மாநகரம் பெரியதோட்டத்தை சேர்ந்தவர் முகமது ரபீக் (27). பனியன் நிறுவன டெய்லர். இவருடைய நண்பர் முகமது இலியாஸ் (28). இவர்களுக்குள் முன் விரோதம் இருந்துள்ளது. கடந்த மாதம் 23-ந் தேதி திருப்பூர் ரோட்டரி மின்மயானம் ரோட்டில் அமர்ந்து முகமது ரபீக் தனது நண்பர்களான முகமது இலியாஸ், முகமது இஸ்மாயில், இளவரசன் ஆகியோருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது முகமது இலியாசின் மனைவியை முகமது ரபீக் தகாத வார்த்தையால் பேசியதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் பீர் பாட்டிலை உடைத்து 3 பேரும் சேர்ந்து முகமது ரபீக்கை கொலை செய்தனர். வடக்கு போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

கழுத்தை அறுத்துக்கொலை

அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியை சேர்ந்த சத்தியஸ்ரீ (21). இவர் திருப்பூர் குமார்நகர் 60 அடி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் வரவேற்பாளராக பணியாற்றினார். முகநூல் பழக்கத்தில் காட்டுமன்னார் கோவிலை சேர்ந்த நரேந்திரனுடன் (21) பழக்கம் ஏற்பட்டு காதலாகி மாறியுள்ளது. அவர்களுக்குள் தகராறு ஏற்பட கடந்த 1-ந் தேதி மருத்துவமனையில் இருந்த சத்தியஸ்ரீயை, நரேந்திரன் கத்தியால் கழுத்தை அறுத்துக்கொலை செய்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திண்டுக்கல் மாவட்டம் அத்திக்கோம்பை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (46), இவருடைய தங்கை தமிழ்செல்வி (42). மனநலம் பாதிக்கப்பட்டவர். இவர்கள் திருப்பூர் மாவட்டம் குறிச்சிக்கோட்டை பகுதியில் குடியிருந்து வருகின்றனர். இந்தநிலையில் கடந்த 2-ந் தேதி, தமிழ்செல்வி வீட்டை அசுத்தம் செய்ததால் கோபத்தில் இரும்பு கம்பியால் சக்திவேல் தனது தங்கையை அடித்துக்கொலை செய்தார். தளி போலீசார் அவரை கைது செய்தனர்.

மதுபோதையில் தகராறு

தென்காசி ஆலங்குளத்தை சேர்ந்த மதியழகன் (45). தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளையை சேர்ந்த பட்டுப்பாண்டி. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஸ்ரீமுருகன் ஆகியோர் நண்பர்கள். இவர்கள் மடத்துக்குளத்தில் வசித்து வந்தனர். மதியழகன் சாமியார் போல் வீடு, வீடாக யாசகம் செய்து பிழைப்பு நடத்தி வந்துள்ளார். பட்டுப்பாண்டி, ஸ்ரீமுருகன் இருவரும் இரும்புக்கடையில் வேலை செய்துள்ளனர். 3 பேரும் இரவில் மது அருந்துவது வழக்கம். கடந்த 6-ந் தேதி இரவில் மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் மதியழகனை கம்பியால் 2 பேரும் அடித்துக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தில் 2 பேரையும் மடத்துக்குளம் போலீசார் கைது செய்தனர்.

திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்தவர் யுவராஜ் (32). இவர் அவினாசி வேலாயுதம்பாளையத்தில் தங்கியிருந்து குடிநீர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் அவர் தங்கியிருந்த அறையில் கழுத்து அறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த 16 வயது பள்ளி மாணவனை அவினாசி போலீசார் பிடித்தனர்.

நடவடிக்கை அவசியம்

இந்த கொலை சம்பவங்கள் பெரும்பாலும் மதுபோதை தகராறால் நடந்தவை. அதுபோல் சிறிய விசயத்துக்காக கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. மதுவை குடிப்பவர்களின் உயிருக்கு மட்டும் கேடு விளைவிக்காமல் அவர்களின் குடும்பத்தினருக்கு மட்டுமில்லாமல் நாட்டுக்கும் கேடு விளைவித்து வருகிறது. அடுத்தடுத்து நடக்கும் கொலை சம்பவங்களை தடுப்பதற்கு மாவட்ட நிர்வாகம், காவல்துறை உரிய நடவடிக்கை எடுப்பது காலத்தின் கட்டாயமாகும்.


Next Story