கோபியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 13 வீடுகள் இடித்து அகற்றம்
கோபியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 13 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
கடத்தூர்
கோபியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 13 வீடுகள் இடித்து அகற்றப்பட்டன.
13 குடும்பத்தினர்
கோபி நகராட்சிக்குட்பட்ட சக்தி நகரில் பல ஆண்டுகளாக 13 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2001-ம் ஆண்டு நத்தம் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் பட்டா வழங்கினர். அதைத்தொடர்ந்து 13 குடும்பத்தினரும் அங்கு வீடு கட்டி வசித்து வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஒருவர் 13 வீடுகள் உள்ள இடம் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டுள்ளது எனக்கூறி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
மின்இணைப்பு துண்டிப்பு
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு, தனி நபருக்கு சாதகமாக தீர்ப்பு அளித்தது. கோபி சக்தி நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக கூறி அவற்றை இடிக்க உத்தரவிட்டது. இதையொட்டி வீடுகளை காலி செய்யுமாறு அந்த பகுதியில் தனியார் சார்பில் பேனர் வைக்கப்பட்டது. ஆனால் வீடுகளை யாரும் காலி செய்யவில்லை.
அதைத்தொடர்ந்து கடந்த மாதம் போலீஸ் பாதுகாப்புடன் அங்கு சென்று வீடுகளை இடித்து அப்புறப்படுத்த முயற்சி நடந்தது. இதற்கு வீடுகளில் குடியிருந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் வீடுகளில் உள்ள மின் இணைப்புகளை மட்டும் துண்டித்துவிட்டு சென்றுவிட்டனர்.
வீடுகள் இடித்து அகற்றம்
அதன்பின்னர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வீடுகளில் குடியிருந்தவர்கள் அவர்களாகவே வீடுகளை காலி செய்து கொண்டனர். ஒரு சில பொருட்களை மட்டும் வீட்டில் விட்டு சென்றனர்.
இந்த நிலையில் நேற்று காலை பொக்லைன் எந்திரங்களுடன் கோபி போலீசார் அங்கு சென்றனர். இதுபற்றி அறிந்ததும் அந்த வீடுகளில் குடியிருந்தவர்களும் அங்கு சென்றனர்.
அவர்கள் தாங்கள் விட்டு சென்ற சில பொருட்களை எடுத்து சென்றனர். பின்னர் பொக்லைன் எந்திரங்கள் மூலம் 13 வீடுகளும் இடித்து அகற்றப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.