மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 130 பேர் கைது


மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 130 பேர் கைது
x
தினத்தந்தி 13 July 2023 12:36 AM IST (Updated: 13 July 2023 6:02 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட 130 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

மாநகராட்சி அலுவலகம் முற்றுகை

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தூய்மைப்பணிகள் மற்றும் போக்குவரத்து, மின்சாரம், அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் ஒப்பந்தம் விடும் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். தேர்தல் காலத்தில் நிரந்தரப்படுத்துவதாக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நிரந்தரதன்மை வாய்ந்த வேலைகளில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் குறைந்தபட்ச ஊதிய அரசாணையின்படி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று நடந்தது.

130 பேர் கைது

இதற்காக திருச்சி ஒத்தக்கடை சிக்னலில் இருந்து சி.ஐ.டி.யு. மாநில துணைத்தலைவர் ரெங்கராஜன் தலைமையில் சி.ஐ.டி.யு. மாநகர் மாவட்ட தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் கையில் கொடிகளுடன் ஊர்வலமாக புறப்பட்டு மாநகராட்சி அலுவலகத்தை அடைந்தனர்.

அங்கு மாநகராட்சி அலுவலக நுழைவுவாயில் முன்பு சாலையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கண்டோன்மெண்ட் போலீஸ் உதவி கமிஷனர் கென்னடி தலைமையிலான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர். அவர்கள் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். இதில் மொத்தம் 64 பெண்கள் உள்பட 130 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் வேனில் ஏற்றி செல்லப்பட்டு தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் மாலையில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story