வெறிநாய் கடித்து 14 ஆடுகள் செத்தன


வெறிநாய் கடித்து 14 ஆடுகள் செத்தன
x
தினத்தந்தி 5 Sep 2022 8:15 PM GMT (Updated: 5 Sep 2022 8:15 PM GMT)
சேலம்

தேவூர்:-

தேவூர் அருகே கல்வடங்கம் பகுதியில் வெறிநாய் கடித்து குதறியதில் 14 ஆடுகள் செத்தன. 19 ஆடுகள் படுகாயம் அடைந்தன.

வெறிநாய் கடித்தது

தேவூர் அருகே கோனேரிப்பட்டி அக்ரஹாரம் ஊராட்சி கல்வடங்கம் பகுதியில் வசிப்பவர் கணேசன் (வயது 59). இவருடைய மனைவி ஜோதி (54). இவர்கள் இருவரும் குடிசையில் மூங்கிலால் பட்டி அமைத்து அதில் 19 செம்மறி ஆடுகள் அடைத்து வைத்து வளர்த்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல ஜோதி, ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் இரவு குடிசையில் உள்ள மூங்கில் பட்டியில் ஆடுகளை அடைத்து விட்டு வீட்டுக்கு சென்று தூங்கினார். இதனிடையே இரவில் கல்வடங்கம் பகுதியில் விடிய, விடிய கனமழை பெய்தது. இதையடுத்து மழைக்கு ஒதுங்குவதற்காக வெறிநாய் ஒன்று ஆடுகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டிக்குள்புகுந்தது.

14 ஆடுகள் செத்தன

பின்னர் அந்த வெறிநாய் அங்கிருந்த 5 செம்மறி ஆடுகளை கடித்து குதறியதில் அவை சம்பவ இடத்திலேயே செத்தன. அதே நேரத்தில் அங்கிருந்த 9 செம்மறி ஆடுகளை வெறிநாய் கடித்து குதறி காயம் ஏற்படுத்தி விட்டு அங்கிருந்து அருகில் உள்ள வீடுகளில் கட்டப்பட்டிருந்த ஆடுகளையும் கடித்துகுதறியது. குறிப்பாக அந்த பகுதியில் சாந்தி (50) என்பவருடைய 7 செம்மறி ஆடுகளையும், அம்சவேணி (47) என்பவருடைய 2 செம்மறி ஆடுகளையும் வெறிநாய் கடித்து குதறியதில் அவைகள் செத்தன. 10 ஆடுகள் காயம் அடைந்தன. நேற்று ஒரே நாளில் வெறிநாய் கடித்ததில் 14 ஆடுகள் செத்தன. மேலும் அந்த பகுதியில் உள்ள 19 செம்மறி ஆடுகள் காயம் அடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

கோரிக்கை

இது குறித்து தகவல் கிடைத்ததும், தேவூர் வருவாய் ஆய்வாளர் சத்தியராஜ், கோனேரிப்பட்டி அக்ரஹாரம் கிராம நிர்வாக அலுவலர் விஜயராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தேவூர் கால்நடை மருந்தக உதவி டாக்டர் கண்ணன் தலைமையிலான குழுவினர் படுகாயம் அடைந்த செம்மறி ஆடுகளுக்கு சிகிச்சைஅளித்தனர்.

மேலும் அந்த பகுதியில் அடிக்கடி ஆடுகளை கடித்து பலியாக்கி வரும் வெறிநாயை பிடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story