வைகுண்ட ஏகாதசி விழாவில் 14½ லட்சம் பக்தர்கள் தரிசனம்


வைகுண்ட ஏகாதசி விழாவில் 14½ லட்சம் பக்தர்கள் தரிசனம்
x

வைகுண்ட ஏகாதசி விழாவில் 14½ லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

வைகுண்ட ஏகாதசி

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் 108 வைணவ தலங்களுள் முதன்மையானதாகும். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. 20 நாட்கள் நடைபெற்ற இந்த விழாவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் எண்ணிக்கை விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

இதில் கடந்த மாதம் 23-ந் தேதியில் இருந்து பகல் பத்து உற்சவம் தொடங்கி நடந்தது. பகல் பத்து உற்சவத்தின்போது ஒவ்வொரு நாளும் உற்சவர் நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து வெவ்வேறு அலங்காரங்களில் புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். ஒவ்வொரு நாளும் அரையர்கள் சேவையுடன் நம்பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிகளில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

14½ லட்சம் பக்தர்கள்

பகல் பத்து உற்சவத்தின் 10 நாட்களில் மொத்தம் 4 லட்சத்து 99 ஆயிரத்து 87 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதிகபட்சமாக 10-ம் நாள் மோகினி அலங்காரத்தில் நம்பெருமாளை தரிசிக்க 81 ஆயிரத்து 754 பக்தர்கள் குவிந்தனர். இதைத்தொடர்ந்து வைகுண்ட ஏகாதசி ராப்பத்து உற்சவம் கடந்த 2-ந்தேதி தொடங்கியது. நேற்று காலை நம்மாழ்வார் மோட்சத்துடன் வைகுண்ட ஏகாதசி திருவிழா நிறைவு பெற்றது.

ராப்பத்து உற்சவத்தில் முதல் நாள் நம்பெருமாள் பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். நம்பெருமாளுடன் சேர்ந்து சொர்க்கவாசலை கடந்தால் சொர்க்கத்தை அடையலாம் என்ற நம்பிக்கையின் காரணமாக அன்று மட்டும் 2 லட்சத்து 16 ஆயிரத்து 39 பக்தர்கள் கலந்து கொண்டனர். வைகுண்ட ஏகாதசி விழா தொடக்க நாள் முதல் நேற்று வரை 20 நாட்களில் 14 லட்சத்து 45 ஆயிரத்து 289 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ரூ.1.92 கோடி

இதேபோல் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த மாதம் 23-ந் தேதி முதல் நேற்று முன்தினம் வரை மூலவர் ரெங்கநாதர் முத்தங்கியில் சேவை சாதித்தார். இதை காண தினமும் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மேலும் சிறப்பு கட்டண சீட்டு முறையும் அமல்படுத்தப்பட்டு இருந்தது.

மூலவரை தரிசிக்க நடப்பு ஆண்டு ரூ.1 கோடியே 92 லட்சத்து 93 ஆயிரத்து 600-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டுள்ளது. இது புதிய சாதனையாகும். இதற்கு முன்பு கடந்த 2017-ம் ஆண்டு ரூ.1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 460-க்கு கட்டண சீட்டு விற்கப்பட்டதுதான் அதிகபட்சமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா காரணமாக கடந்த சில ஆண்டுகளாக கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் எண்ணிக்கை எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. இந்த ஆண்டு பக்தர்கள் வருகை முதல் நாளில் இருந்தே அதிகமாக காணப்பட்டது. இதனால் இந்த ஆண்டு வருவாய் அதிகரித்துள்ளது.


Next Story