புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் பாலாற்றில் பாய்கிறது


புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் பாலாற்றில் பாய்கிறது
x

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் பாய்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திருப்பத்தூர்

வாணியம்பாடி அருகே தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள புல்லூர் தடுப்பணையில் இருந்து 1,400 கன அடி தண்ணீர் பாய்வதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

1,400 கன அடி தண்ணீர்

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே பெரும்பள்ளம் பகுதியில் 15 அடி உயர புல்லூர் தடுப்பணையை கட்டி உள்ளது. வாணியம்பாடி அருகே தமிழக-ஆந்திர எல்லை பகுதியில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக புல்லூர் தடுப்பணை தற்போது 3-வது முறையாக நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது.

தடுப்பணையில் இருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் பாலாற்றில் பாய்கிறது. ஆற்றின் மறுகரையில் கனகநாச்சி அம்மன் கோவில் உள்ளது. தடுப்பணையை தாண்டிதான் இந்த கோவிலுக்கு செல்ல வேண்டும். தற்போது தடுப்பணையில் இருந்து அதிக அளவு தண்ணீர் வருவதால் கனக நாச்சியம்மன் கோவிலுக்கு யாரும் செல்ல வேண்டாம் என ஆந்திர மாநில அரசு தடை விதித்துள்ளது.

அதேபோன்று பாலாற்றில் நீர்வரத்து இன்னும் அதிகரிக்கும் என்பதால் தடுப்பணையில் குளிக்கவோ, கடந்து செல்லவோ கூடாது என ஆந்திர அரசு அறிவித்துள்ளது.

பாதுகாப்பாக...

புல்லூர் தடுப்பணையிலிருந்து வெளியேறும் தண்ணீர் ஆவாரங்குப்பம், திம்மாம்பேட்டை, ராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி வழியாக வாணியம்பாடியை கடந்து ஆம்பூரை நோக்கி அதிவேகமாக சென்று கொண்டு இருப்பதால் விரைவில் வேலூர் பகுதியில் அதிக அளவு தண்ணீர் செல்லும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எனவே கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.


Next Story