குமரியில் 1,400 விநாயகர் சிலைகள் கரைப்பு


தினத்தந்தி 24 Sep 2023 6:45 PM GMT (Updated: 24 Sep 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் கரைக்கப்பட்டன.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு 10 இடங்களில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள்

குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி அன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் கடந்த 3 நாட்களாக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. அந்த வகையில் கடந்த 22-ந் தேதி சிவசேனா சாா்பில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து 2-வது நாளான நேற்று முன்தினம் அகில பாரத இந்து மகா சபா சார்பில் 300-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று இந்து முன்னணி சார்பில் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. அந்த வகையில் நாகர்கோவில் மாநகர் மற்றும் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் கோவில்கள், பொது இடங்களில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் நாகராஜா கோவில் திடலுக்கு எடுத்து வந்தனர். அங்கு விநாயகர் சிலைகள் ஊர்வலம் தொடக்க விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணகுமார் தலைமை தாங்கினார். ஊர்வலத்தை முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலில் கரைப்பு

நாகராஜா கோவில் திடலில் இருந்து விநாயகர் சிலைகள் சங்குத்துறை கடலில் கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. இதில் கற்பக விநாயகர், ஊஞ்சல் விநாயகர், அன்ன விநாயகர் என வித விதமான விநாயகர் சிலைகள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன.

நாகராஜா கோவில் திடலில் இருந்து புறப்பட்ட ஊர்வலமானது அவ்வை சண்முகம் சாலை, ஒழுகினசேரி சந்திப்பு, வடசேரி, அண்ணா விளையாட்டு அரங்கம், மணிமேடை, கோட்டார், பீச்ரோடு சந்திப்பு வழியாக சங்குத்துறை கடற்கரையை சென்றடைந்தது. பின்னர் கடற்கரை மணலில் விநாயகர் சிலைகளை வரிசையாக வைத்து பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது. இதனையடுத்து விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. அந்த வகையில் மொத்தம் 114 விநாயகர் சிலைகள் சங்குத்துறை கடலில் கரைக்கப்பட்டன.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ.

நிகழ்ச்சியில் எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., மாநில பொதுச் செயலாளர் அரசு ராஜா, பா.ஜனதா மாவட்ட பொருளாளர் முத்துராமன் மற்றும் நிர்வாகிகள் உமாரதி ராஜன், தேவ், மீனாதேவ், கவுன்சிலர்கள் ரமேஷ், சுனில் குமார், ஆட்சியம்மாள், ரோசிட்டா, இந்து முன்னணி மாநகர் தெற்கு மண்டல தலைவர் தியாகராஜன், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் பிரவீன், சுரேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேல்புறம்-குழித்துறை

மேற்புறம் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் மொத்தம் 227 சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. அவை நேற்று அளப்பங்கோடு ஈஸ்வர கால பூதத்தான் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு குழித்துறை தாமிர பரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சந்திரசேகர், மாநில செயற்குழு உறுப்பினர் செல்லன், திருச்சி கோட்ட செயலாளர் போஜ ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் குழித்துறை நகர இந்து முன்னணி சார்பில் பூஜைக்கு வைக்கப்பட்ட 22 சிலைகள் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் நகரத் தலைவர் வினுகுமார் தலைமை, பொதுச்செயலாளர் விமல் குமார், ஒருங்கிணைப்பாளர் அருண், துணைத் தலைவர் சுஜின் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்சிறை ஒன்றியம்

முன்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பூைஜக்காக வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அஞ்சுகண்ணுகலுங்கு மாடன் தம்புரான் இசக்கியம்மன் கோவில் வளாகத்தில் கொண்டு வரப்பட்டன. அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தேங்காப்பட்டணம் கடலில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் செல்வ நாயகம், கோட்டச் செயலாளர் மிசா சோமன், மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருவட்டார் ஒன்றியம்

திருவட்டார் ஒன்றியப் பகுதிகளில் இந்து முன்னணி சார்பில் 147 விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. அவை நேற்று செருப்பாலூர் முத்தாரம்மன் கோவில் முன்பு இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு திற்பரப்பு அருவி அருகே கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் சதீஷ் குமார், மாவட்ட ஆலோசகர் செல்லன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆசீர்வாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தக்கலை ஒன்றியம்

தக்கலை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 153 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. இந்த சிலைகள் நேற்று தக்கலை அருகில் உள்ள வைகுண்டபுரம் ராமர் கோவில் வளாகத்தில் இருந்து மண்டைக்காடு கடற்கரைக்கு எடுத்து செல்லப்பட்டு கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சுஜின், மாநில பொதுச்செயலாளர் அரசு ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குளச்சல்

குளச்சல் நகர இந்து முன்னணி மற்றும் குருந்தன்கோடு ஒன்றியம் சார்பில் 130 சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. அவை திங்கள்சந்தையில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வெட்டுமடை கடலில் கரைக்கப்பட்டன.

கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 116 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டு இருந்தன. அவை நேற்று கருங்கல் கூனாலுமூடு தர்ம சாஸ்தா கோவிலுக்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு மிடலாம் கடலில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் மாங்கரை மணிகண்டன், மாவட்ட ஆலோசகர் மிஷா சோமன், முன்னாள் கீழ்குளம் பேரூராட்சி தலைவர் விஸ்வநாதன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

தோவாளை

தோவாளை ஒன்றிய இந்து முன்னணி சார்பில் 84 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டன. அவை நேற்று தோவாளைக்கு கொண்டு வரப்பட்டு அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு ஞாலம் பள்ளிக்கொண்டான் தடுப்பணையில் கரைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் தோவாளை ஒன்றிய தலைவர் நாராயண ராஜ், ஒன்றிய செயலாளர் முகேஷ், விசுவ இந்து பரிஷத் மாநில துணைச்செயலாளர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுபோல் அகஸ்தீஸ்வரம் ஒன்றியத்தில் வைக்கப்பட்டு இருந்த 108 விநாயகர் சிலைகள் சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் முன் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் கரைக்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஒன்றிய இந்து முன்னணி தலைவர் செல்வன், துணைத்தலைவர் சுரேஷ்குமார், சாமிதோப்பு சிவச்சந்திரன், ஒன்றிய பொருளாளர் பொன்னையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பாதுகாப்பு

அந்த வகையில் மாவட்டம் முழுவதும் 1,400-க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் மொத்தம் 10 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலத்தையொட்டி மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ஊர்வலம் செல்லும் பாதைகள், முக்கிய சந்திப்புகள், பிற மத வழிபாட்டு தலங்கள் முன் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.


Next Story