குடியரசு தின விடுமுறையையொட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை


குடியரசு தின விடுமுறையையொட்டி ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை
x

குடியரசு தின விடு முறையையொட்டி நேற்று ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை தந்தனர்.

வண்டலூர்,

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 1977 விலங்குகள் மற்றும் பறவைகள் பராமரிக்கப்படுகிறது. இதனை தினந்தோறும் ஏராளமான பொதுமக்கள் பார்த்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்பட பல்வேறு பகுதியில் இருந்து பொதுமக்கள் குடும்பம் குடும்பமாக வருகை தந்தனர். இதனால் வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு டிக்கெட் வாங்கும் இடத்தில் பொதுமக்களின் கூட்டம் அலைமோதியது.

பொதுமக்கள் பூங்காவில் உள்ள வெள்ளைப்புலிகள், யானைகள், காண்டாமிருகம், நீர்யானை, மனித குரங்குகள், பாம்பு இல்லம், பூங்காவுக்கு புதிய வரவாக வந்துள்ள இருவாச்சி பறவை, மலேயன் ராட்சத அணில், ஜம்முவில் இருந்து கொண்டு வரப்பட்ட இமாலயா கருப்பு கரடி, சிவப்பு மார்பக கிளி மற்றும் உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளை பெரியோர்கள் முதல் குழந்தைகள் வரை ரசித்து பார்த்து மகிழ்ந்தனர்.

ஒரே நாளில் 14 ஆயிரம் பேர்

நேற்று மட்டும் ஒரே நாளில் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 14 ஆயிரம் பேர் வருகை தந்தனர். நேற்று முன்தினம் தைப்பூச தினத்தில் 5 ஆயிரத்து 500 பேர் பூங்காவுக்கு வருகை தந்தனர். ஆக மொத்தம் நேற்று முன்தினம், நேற்று ஆகிய 2 நாட்களில் 19 ஆயிரத்து 500 பேர் பூங்காவை சுற்றி பார்த்து சென்றுள்ளனர். நேற்று ஒரே நாளில் 14 ஆயிரம் பேர் பூங்காவுக்கு வருகை தந்ததால், வண்டலூர்-கேளம்பாக்கம் சாலை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா எதிரே உள்ள ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் பெரிதும் அவதிப்பட்டனர்.


Next Story