144 தடை உத்தரவால் தேர்வர்கள் பாதிக்காமல் இருக்க ஏற்பாடு
இன்றும், நாளையும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற உள்ள நிலையில் 144 தடை உத்தரவால் தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
இன்றும், நாளையும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வு நடைபெற உள்ள நிலையில் 144 தடை உத்தரவால் தேர்வு எழுதுபவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்து உள்ளார்.
எழுத்துத்தேர்வு
தமிழ்நாடு அரசுப்பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. தொகுதி 7 பி பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-3 பதவிக்கான எழுத்து தேர்வு இன்று(சனிக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் ராமநாதபுரத்தில் 5 தேர்வு கூடங்களில் நடைபெற உள்ளது. 1,280 தேர்வர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர்.
மேலும் தொகுதி 8 பணியில் அடங்கிய செயல் அலுவலர் நிலை-4 பதவிக்கான எழுத்து தேர்வு நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை மற்றும் பிற்பகலில் ராமநாதபுரத்தில் 6 தேர்வுக்கூடங்களில் நடைபெறுகிறது. 1,620 தேர்வர்கள் இந்த தேர்வு எழுத உள்ளனர்.
தேர்வர்களுக்கு வசதி
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை தியாகி இமானுவேல்சேகரன் நினைவு தினத்தையொட்டி மாவட்ட நிர்வாகத்தால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவால் நாளை குறைந்த அளவிலான பஸ்கள் இயக்கப்படும். எனவே நாளை நடைபெறவுள்ள தமிழ்நாடு தேர்வாணைய தேர்விற்கு தேர்வர்கள் அனைவரும் தங்களது சொந்த வாகனங்களில் தேர்வு அனுமதி சீட்டு உடன் பயணித்து தேர்வுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். தவிர வாடகை வாகனங்களில் பயணிக்க அனுமதி இல்லை.
மேலும் நாளை நடைபெறவுள்ள தேர்விற்கு பங்கேற்க ஏதுவாக ராமநாதபுரம் பகுதியில் தேர்வர்கள் தங்கி தேர்வு எழுத கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தேர்வர்கள் ராமநாதபுரம் நகரில் தங்குவதற்கு இடவசதி தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்தினை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதற்கென கலெக்டர் அலுவலகத்தில் உள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தகவல் தெரிவித்து பயன்பெற்று கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார்கள்.