14,539 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்


14,539 மாணவ, மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதினர்
x
தினத்தந்தி 13 March 2023 7:00 PM GMT (Updated: 13 March 2023 7:00 PM GMT)
தேனி

பிளஸ்-2 பொதுத்தேர்வு

தமிழகத்தில் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. தேனி மாவட்டத்தில் 142 மேல்நிலைப்பள்ளிகளை சேர்ந்த 8,038 மாணவர்கள், 7,514 மாணவிகள் என மொத்தம் 15 ஆயிரத்து 552 மாணவ, மாணவிகள் இந்த தேர்வை எழுத அனுமதி பெற்றிருந்தனர்.

இதற்காக மாவட்டத்தில் 53 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. முதல் நாளான நேற்று தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது. இந்த தேர்வை 14 ஆயிரத்து 539 மாணவ, மாணவிகள் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 1,013 பேர் தேர்வு எழுத வரவில்லை. கண் பார்வையற்றவர்கள் மற்றும் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.

தனித்தேர்வர்கள்

மேலும் தனித்தேர்வர்களுக்கு 3 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அங்கு தமிழ் பாடத்தேர்வை எழுத 191 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 21 பேர் தேர்வு எழுத வரவில்லை. 170 பேர் தேர்வு எழுதினர்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவிகள் காலை 7.30 மணியில் இருந்தே தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். அவர்கள் தேர்வு மைய வளாகத்தில் ஆங்காங்கே அமர்ந்து கடைசி கட்ட வாசிப்பில் தீவிரமாக ஈடுபட்டனர். தாங்கள் படித்த பாடங்களை மீண்டும் புரட்டிப் பார்த்து தேர்வுக்கு தயாராகினர். தேர்வு தொடங்கும் முன்பு தேர்வு நடைமுறைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் அறிவுரை வழங்கினர்.

கலெக்டர் ஆய்வு

இந்த தேர்வுக்காக தேர்வு அறை கண்காணிப்பாளர்களாக 778 பேர் ஈடுபட்டனர். 18 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு இருந்தன. பறக்கும் படையினர் தேர்வு அறைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று தேர்வு நடைமுறைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளும் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். அமைதியான முறையில் தேர்வு நடந்தது. இதன் தொடர்ச்சியாக, இன்று (செவ்வாய்க்கிழமை) பிளஸ்-1 அரசு பொதுத்தேர்வு தொடங்குகிறது. அந்த தேர்வை 13 ஆயிரத்து 110 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.


Next Story