10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 14,626 மாணவ, மாணவிகள் எழுதினர்


10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 14,626 மாணவ, மாணவிகள் எழுதினர்
x
தினத்தந்தி 6 April 2023 7:00 PM GMT (Updated: 6 April 2023 7:00 PM GMT)

தேனி மாவட்டத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வை 14,626 மாணவ, மாணவிகள் எழுதினர். 367 பேர் தேர்வு எழுத வரவில்லை.

தேனி

10-ம் வகுப்பு தேர்வு

தமிழகத்தில் 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. முதல் நாளில் தமிழ் பாடத்துக்கான தேர்வு நடந்தது. தேனி மாவட்டத்தில் இந்த தேர்வுக்காக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 66 தேர்வு மையங்கள், தனித்தேர்வர்களுக்கு 4 மையங்கள் என மொத்தம் 70 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.தேனி மாவட்டத்தில் 200 பள்ளிகளை சேர்ந்த 7,608 மாணவர்கள், 7,385 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 993 பேர் தேர்வு எழுத அனுமதி பெற்றிருந்தனர்.

தமிழ் பாடத் தேர்வை 7,354 மாணவர்கள், 7,272 மாணவிகள் என மொத்தம் 14 ஆயிரத்து 626 பேர் எழுதினர். தேர்வு எழுத அனுமதி பெற்றவர்களில் 254 மாணவர்கள், 113 மாணவிகள் என மொத்தம் 367 பேர் தேர்வு எழுத வரவில்லை.

கலெக்டர் ஆய்வு

தனித்தேர்வர்களாக தேர்வு எழுத 462 பேர் அனுமதி பெற்றிருந்தனர். அவர்களில் 422 பேர் தேர்வு எழுதினர். 21 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.

தேர்வு மையங்களுக்கு காலை 7.30 மணியில் இருந்தே மாணவ, மாணவிகள் வரத் தொடங்கினர். 10 மணிக்கு தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அதுவரை தேர்வு மைய வளாகத்தில் அமர்ந்து மாணவ, மாணவிகள் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர்.

கோட்டூர் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு செய்தார். தேர்வு நடைமுறைகளை அவர் பார்வையிட்டார்.

அதுபோல், தேர்வு மையங்களில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், முறைகேடுகள் நடக்காமல் தடுக்க அமைக்கப்பட்ட பறக்கும் படையினரும் தேர்வு மையங்களில் திடீர் சோதனைகளில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story