2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 14,670 பேர் எழுதினர்


2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 14,670 பேர் எழுதினர்
x

2-ம் நிலை காவலர் பணிக்கான தேர்வை 14,670 பேர் எழுதினர்.

திருச்சி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் தமிழகம் முழுவதும் 2-ம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறை வார்டன் உள்ளிட்ட பணிகளுக்கான எழுத்துத்தேர்வு நேற்று நடைபெற்றது. இதற்கு விண்ணப்பித்தவர்களில் திருச்சி மாநகரில் 16 மையங்களில் 8 ஆயிரத்து 371 பேருக்கும், புறநகரில் 7 மையங்களில் 9 ஆயிரத்து 500 பேருக்கும் என மொத்தம் 23 மையங்களில் 17,871 பேருக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் அனுப்பப்பட்டு இருந்தது.

நேற்று காலை 7 மணி முதல் தேர்வு மையங்களுக்கு இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வர தொடங்கினர். தேர்வு மையங்களுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் நீண்ட வரிசையில் நிற்க வைக்கப்பட்டு ஹால்டிக்கெட், ஆதார்கார்டு போன்றவற்றை சரிபார்த்து பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்டனர். மேலும் பேனா, ஹால்டிக்கெட் தவிர, செல்போன், டிஜிட்டல் வாட்ச் உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் எடுத்து செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.

3,201 பேர் தேர்வுக்கு வரவில்லை

ஒரு சில விண்ணப்பதாரர்கள் தேர்வு தொடங்கும் நேரத்தில் வந்ததால் அவசர, அவசரமாக தேர்வு மையத்துக்கு ஓடி சென்றனர். தாமதமாக வந்தவர்கள் தேர்வுக்கு அனுமதிக்கப்படவில்லை. தேர்வு எழுத வந்தவர்களின் செல்போன், பை உள்ளிட்ட உடமைகளை தேர்வு மையத்துக்கு வெளியே பாதுகாப்பாக வாங்கி வைத்து இருந்தனர். காலை 10 மணி முதல் பகல் 12.40 வரை தேர்வு நடைபெற்றது. இந்த எழுத்துத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு விரைவில் உடற்தகுதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

தேர்வு மையங்களை மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மத்திய மண்டல ஐ.ஜி. சந்தோஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த தேர்வை புறநகரில் 7 ஆயிரத்து 865 பேரும், மாநகரில் 6,805 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 670 பேர் தேர்வு எழுதினர். புறநகரில் 1,635 பேரும், மாநகரில் 1,566 பேரும் என மொத்தம் 3,201 பேர் தேர்வு எழுத வரவில்லை. காவலர் பணிக்கான எழுத்துத்தேர்வையொட்டி அனைத்து மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Next Story