மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு


மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 9 Sep 2023 9:43 PM GMT (Updated: 9 Sep 2023 9:46 PM GMT)

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13¼ கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ஒரே நாளில் 1,468 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13¼ கோடி இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய மக்கள் நீதிமன்றம்

தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின் படியும் தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான ஜெசிந்தா மார்ட்டின் தலைமையில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. இதில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வுகாணும் வகையில் இந்த முகாம் நடைபெற்றது.

சிவில் வழக்குகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் குடும்ப நல வழக்குகளுக்கு கூடுதல் சார்பு நீதிபதி முருகன், மாவட்ட உரிமையியல் நீதிபதி கீதா, வக்கீல் மகாசண்முகம் அடங்கிய முதலாவது அமர்வில் தீர்வு காணப்பட்டது. 2-வது அமர்வில் மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கு, மோட்டார் வாகன வழக்குகள் நீதிமன்ற சிறப்பு சார்பு நீதிபதி தங்கமணி, குற்றவியல் நீதித்துறை நடுவர் பாரதி, வக்கீல் எலன்ரோஜ் ஆகியோர் கொண்ட அமர்வில் தீர்வு காணப்பட்டது.

1,468 வழக்குகளுக்கு தீர்வு

மேற்கண்ட மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அமர்வுகளோடு, கும்பகோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, பாபநாசம் மற்றும் திருவையாறு ஆகிய வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வுகள் உட்பட மொத்தம் 3 ஆயிரத்து 337 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டு அதில் 1,468 வழக்குகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இதில் ரூ.13 கோடியே 24 லட்சத்து 29 ஆயிரத்து 836 இழப்பீடு மற்றும் தீர்வு தொகையாக வழக்காடிகளுக்கு பெற்று தரப்பட்டது. இதில் தஞ்சை மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவரும், நீதிபதியுமான ஜெயஸ்ரீ, சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சார்பு நீதிபதியுமான இந்திராகாந்தி, தஞ்சை மாவட்ட வக்கீல்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் நிர்வாக அலுவலர் சந்தோஷ்குமார் மற்றும் சட்ட தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story