பீல்ட் மார்ஷல் மானெக் ஷாவின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு


பீல்ட் மார்ஷல் மானெக் ஷாவின் 14-வது நினைவு தினம் அனுசரிப்பு
x

மானெக் ஷாவின் 14-வது நினைவு தினத்தையொட்டி ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

ஊட்டி:

பீல்ட் மார்ஷல் சாம் மானெக் ஷாவின் 14-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்பட்டது. இதை முன்னிட்டு குன்னூர் வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி கமாண்டென்ட் மற்றும் உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

1914-ம் ஆண்டு ஏப்ரல் 3-ந் தேதி பஞ்சாப், அமிர்தசரசில் பிறந்த சாம் மானெக் ஷா, பிப்ரவரி 1935-ம் ஆண்டு பிரான்டியர் போர்ஸ் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கோர்க்கா ரைபிள்ஸ், பிரிவினைக்கு நியமிக்கப்பட்டார். கூர்கா படையினரால் 'சாம் பகதூர்' என்று அழைக்கப்பட்டார்.

1971 இந்தியா-பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற சிறந்த பங்களிப்பை அளித்ததற்காக பீல்ட் மார்ஷல் என்ற 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற முதல் இந்திய ராணுவ அதிகாரி ஜெனரல் மானெக் ஷா ஆவார்.

இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷன் மற்றும் பத்ம பூஷன் ஆகிய விருதுகளையும் பெற்றார். அவர் 15 ஜனவரி 1973-ம் ஆண்டு ஓய்வு பெற்று, குன்னூரில் குடியேறினார். அவர் 2008-ம் ஆண்டு ஜூன் மாதம் 27-ம் தேதி வெலிங்டனில் உள்ள ராணுவ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்தநிலையில், அவரது 14-வது நினைவுநாளை முன்னிட்டு ஊட்டியில் உள்ள அவரது நினைவிடத்தில், முப்படைகள் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

இதில் தெற்கு ராணுவத் தளபதி மற்றும் தக்ஸின் பாரத் ஏரியா கமாண்டிங் ஜெனரல் மோகன், முப்படை அதிகாரிகள் பயிற்சி கல்லூரி நிர்வாகி பிரிகேடியர் சந்தோஷ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.


Next Story