மாவட்டத்தில் 15 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயார்


மாவட்டத்தில் 15 பேர் பாதிப்பு: டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயார்
x
தினத்தந்தி 8 Oct 2023 7:09 PM GMT (Updated: 8 Oct 2023 7:09 PM GMT)

மாவட்டத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக அரியலூர் அரசு மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

அரியலூர்

டெங்கு காய்ச்சல்

தமிழகத்தில் தற்போது டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதையொட்டி டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தமிழக சுகாதாரத்துறை தீவிர நடவடிக்கையை எடுத்து வருகிறது. அதன்படி கடந்த 1-ந்தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அரியலூரில் டெங்கு காய்ச்சலின் பரவல் தற்போது அதிகரித்து வருகிறது. ஏற்கனவே 10 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5-ந்தேதி மேலும் 3 பேர் டெங்கு காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 5 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தற்போது 8 பேர் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதேபோல் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் 7 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

20 படுக்கைகள்

இந்தநிலையில் டெங்கு காய்ச்சல் அறிகுறி குறித்து அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது:- டெங்கு காய்ச்சல் ஏடிஸ் கொசு மூலம் பரவுகிறது. நன்னீரில் முட்டையிட்டு இந்த கொசுக்கள் பெருக்கமடைகின்றன. இந்த கொசு கடித்தால் முதல் 3 நாட்களுக்குள் டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்படும். லேசான தலைவலி, உடல்வலி, உடல் முழுவதும் தடிப்புகள் உண்டாகி பசியின்மையும், சோர்வும் ஏற்படும். அடுத்த 3 நாட்களுக்குள் இந்த அறிகுறிகள் அதிகரிக்கும். சில சமயங்களில் இறப்புகள் கூட உண்டாகும். எனவே பொதுமக்கள் அனைவரும் டெங்கு கொசுவில் இருந்து பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

தற்போது டெங்கு காய்ச்சலுக்காக அரசு மருத்துவமனையில் 20 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தேவைப்படும்பட்சத்தில் அவற்றை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை பணியாளர்கள் மூலம் கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. காலை மற்றும் மாலை தான் ஏடிஸ் கொசு அதிகளவில் கடிக்கிறது. அந்நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story