வீட்டில் பதுக்கிய ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல்
வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.15 கோடி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே உள்ள வேதாளை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விலை உயர்ந்த போதை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் வந்தது.
போலீஸ் சூப்பிரண்டு தங்கத்துரை உத்தரவின் பேரில் ராமேசுவரம் துணை சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் மண்டபம் போலீசார், வேதாளை பகுதியில் உள்ள அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர்.
ரூ.15 கோடி
அப்போது அந்த வீட்டின் பீரோவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6 பார்சல்களை கைப்பற்றினார்கள். அந்த பார்சல்களை பிரித்து பார்த்தபோது, அது ஒருவிதமான போதை பவுடர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அந்த 6 பாக்கெட்டுகளில் இருந்து 6 கிலோ போதை பவுடரை கைப்பற்றிய போலீசார் இதுகுறித்து வேதாளை பகுதியை சேர்ந்த நாகக்குமார் (வயது 21), சக்திவேல் (26), பாக்யராஜ் (31) ஆகிய 3 பேரையும் கைது செய்து மண்டபம் போலீஸ் நிலையம் அழைத்து சென்று தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட இந்த போதை பவுடரை படகில் இலங்கைக்கு கடத்துவதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததாகவும், இதன் சர்வதேச மதிப்பு ரூ.15 கோடி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
போலீஸ் அதிகாரி விளக்கம்
இதுபற்றி போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடரானது தமிழில் ஐஸ் போதை பவுடர் என்று கூறுகிறார்கள். ஆங்கிலத்தில் கிறிஸ்டல் மெத்தாம் பேட்டமைன் என்று சொல்லலாம். இந்த பவுடரை நாக்கில் வைத்தால் ஐஸ் போன்று கரைந்து விடும்.
இது விலை உயர்ந்த போதைப்பொருள் ரகம். அதில் 2-ம் ரக பவுடர்தான் தற்போது பிடிபட்டு இருக்கிறது. இதே பவுடரில் முதல் ரகம் அதிக போதை கொடுக்கக்கூடியது.
பறிமுதல் செய்யப்பட்டுள்ள இந்த ஐஸ் போதை பவுடர் ஒரு கிலோவின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.2½ கோடி இருக்கும். இந்த பவுடரை சென்னையில் இருந்து வாங்கி வந்ததாக தெரிவித்துள்ளனர். கைதான 3 பேரின் செல்போன் நம்பரை வைத்து இவர்கள் யார் யாருடன் பேசி உள்ளார்கள், இந்த போதை பவுடர் சென்னையில் எந்த இடத்தில் வாங்கப்பட்டது, இலங்கையில் யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது? என்ற கோணங்களில் தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.