இடி-மின்னலுடன் பலத்த மழை சென்னையில் 15 விமான சேவை பாதிப்பு


இடி-மின்னலுடன் பலத்த மழை சென்னையில் 15 விமான சேவை பாதிப்பு
x

சென்னையில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ததால் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டது. அதில் 5 விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்தன.

சென்னை

மீனம்பாக்கம்,

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் நேற்று மாலை 3 மணியளவில் திடீரென பலத்த காற்று, இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. கர்னூல், கோவை, டெல்லி, கொச்சி, ஜெய்ப்பூர் ஆகிய நகரங்களில் இருந்து 5 விமானங்கள், சென்னை விமான நிலையத்துக்கு வந்தன. அந்த நேரத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் அந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்து கொண்டு இருந்தன.

மழை ஓய்ந்தும் வானில் வட்டமடித்து பறந்து கொண்டிருந்த 5 விமானங்களும் சுமார் 15 நிமிடங்களில் இருந்து 30 நிமிடங்கள் வரை தாமதமாக ஒன்றன் பின் ஒன்றாக சென்னையில் தரை இறங்கின.

அதேபோல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய இலங்கை, மஸ்கட், மும்பை, புனே, கவுகாத்தி, மதுரை, ஐதராபாத் உள்ளிட்ட 10 விமானங்கள் 20 நிமிடங்களில் இருந்து 3 மணிநேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன. சென்னையில் திடீரென காற்றுடன் பெய்த மழையால் சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.


Next Story