சுங்க சாவடியை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் 15 கி.மீ. தொலைவுக்கு இடமாற்றம் செய்ய கோரிக்கை


சுங்க சாவடியை திறப்பதற்கான முன்னேற்பாடுகள் தீவிரம் வாகன நெரிசல் ஏற்படும் என்பதால் 15 கி.மீ. தொலைவுக்கு இடமாற்றம் செய்ய கோரிக்கை
x

திருவண்ணாமலை அருகே போளூர் சாலையில் சுங்க சாவடி திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவண்ணாமலை

கலசபாக்கம்

திருவண்ணாமலை அருகே போளூர் சாலையில் சுங்க சாவடி திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு இடம் மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுங்கச்சாவடி

திருவண்ணாமலையை அடுத்த இனம் காரியந்தல் பஞ்சாயத்துக்கு உட்பட்ட முனியந்தல் சத்திரம் பகுதியில் வேலூர் செல்லும் சாலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க சாவடி அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. திருவண்ணாமலை நகரை ஒட்டி சுங்க சாவடி அமைக்கக் கூடாது என அப்போதே பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் பணி நடைபெறாமல் நிலுவையில் இருந்து வந்தன.

கடந்த சில மாதங்களாக இப்பணி துரிதப் படுத்தப்பட்டு முடிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக சுங்க சாவடி வழியாக வாகனங்களை சோதனை ஓட்டமாக அனுமதித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சுங்க சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டண வசூல் செய்யும் நடைமுறை ஓரிரு நாட்களில் தொடங்க உள்ளதாக பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கட்டணம்

அதன்படி சுங்கவரி கட்டணமாக கார், வேன்கள் செல்வதற்கு ரூ.50, வணிக ரீதியிலான வாகனங்களுக்கு ரூ.80, பஸ் மற்றும் லாரிகளுக்கு ரூ.165 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது பற்றி தகவல் அறிந்த பொதுமக்கள் சுங்கவரி வசூல் செய்வதை நிறுத்த வேண்டும் மேலும் சாலைகளை முறையாக மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். சுங்க சாவடியிலிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், நீதிமன்ற வளாகம் மற்றும் தனியார் பள்ளிகs; அமைந்துள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்படும் மேலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.இதனால் அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உரிய நேரத்தில் செல்ல முடியாமல் பாதிப்பு ஏற்படும். மேலும் அரசு ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்வதற்கும் பள்ளி மாணவர்கள் செல்வதற்கும் காலதாமதம் ஏற்படும்.

இடமாற்றம் செய்ய வேண்டும்

எனவே சுங்கச்சாவடியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் இருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் இடமாற்றம் செய்து அமைக்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் விவசாயிகள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story