வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி; வாலிபர் கைது


வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி; வாலிபர் கைது
x

வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்து ரூ.15 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ரூ.15 லட்சம் மோசடி

சென்னை என்.எஸ்.சி. போஸ் சாலையை சேர்ந்தவர் ஹர்சல் சிவாஜி (வயது 33). இவர், 2020-ம் ஆண்டு 397 கிராம் தங்க நகைகளை, தம்பு செட்டி தெருவில் உள்ள தனியார் வங்கியில் அடமானம் வைத்து சுமார் ரூ.15 லட்சத்துக்கு மேல் கடன் பெற்றார்.

ஆனால் 2 வருடங்களாக நகைக்கு வட்டியும் கட்டாமல், நகையையும் மீட்காததால் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் நகைகளை ஏலம் விடுவதற்காக வங்கி அதிகாரிகள் அந்த நகைகளை சோதனை செய்தனர். அதில் ஹர்சல் சிவாஜி அடகு வைத்த நகைகள் அனைத்தும் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி வங்கி மேலாளர் குருலட்சுமி எஸ்பிளனேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் ஹர்சல் சிவாஜி, சென்னையில் உள்ள ஒரு விடுதியில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து எஸ்பிளனேடு போலீசார் அந்த விடுதிக்கு சென்று ஹர்சல் சிவாஜியை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் இதேபோல் தனியார் நகை கடன் நிறுவனத்திலும் போலி நகைைய அடமானம் வைத்து ரூ.18 லட்சம் வரை மோசடி செய்தது தெரியவந்தது. இவருக்கு உடந்தையாக இருந்த வங்கியின் நகை மதிப்பீட்டாளரை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story