மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை, ரூ.1 லட்சம் கொள்ளை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்

நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள், மூதாட்டியை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
நாட்டறம்பள்ளி அருகே வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கல்லால் தாக்கி 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை கொள்ளையடித்த முகமூடி கொள்ளையர்கள், மூதாட்டியை கை, கால்களை கட்டி நிலத்தில் போட்டுவிட்டு சென்றனர்.
நள்ளிரவில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
முகமூடி கொள்ளையர்கள்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த மேல்மல்லப்பள்ளி சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்தவர் சின்னத்தம்பி. இவரது மனைவி அமராவதி (வயது 60). இவர்களது மகன் தேவராஜ், ஓசூர் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். சின்னத்தம்பி இறந்துவிட்டதால் அமராவதி தனியாக வசித்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமராவதி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். நள்ளிரவு நேரத்தில் முகமூடி அணிந்த மர்ம ஆசாமிகள் அமராவதியின் வீட்டுக்குள் புகுந்துள்ளனர். அங்கு தூங்கிக் கொண்டிருந்த மூதாட்டி கழுத்தில் அணிந்திருந்த நகைகளை பறித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அமராவதி கூச்சல் போட்டுள்ளார்.
நகை, பணம் கொள்ளை
உடனே மூதாட்டி அணிந்திருந்த புடவையால் அவருடைய வாய் மற்றும் கை, கால்களை கட்டிய மர்ம நபர்கள் அவருடைய கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியபடி அருகில் உள்ள நிலத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு வைத்து, வீட்டில் நகை வைத்திருக்கும் இடத்தை கூறுமாறு கேட்டுள்ளனர்.
நகை வைத்திருக்கும் இடத்தை அமராவதி கூற மறுத்ததால் அருகில் கிடந்த கல்லை எடுத்து மூதாட்டியின் முகத்தின் மீது தாக்கி காயப்படுத்தினர். இதில் படுகாயம் அடைந்த மூதாட்டி வேறு வழியில்லாமல் நகை இருக்கும் இடத்தை கூறி உள்ளார். அதைத்தொடர்ந்து அமராவதியை அங்கேயே போட்டுவிட்டு மர்ம நபர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று வீட்டில் இருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 15 பவுன் நகை மற்றும் ரூ.1 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.
கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில்
இந்தநிலையில் நேற்று காலை நிலத்துக்கு சென்ற பொதுமக்கள் மூதாட்டி அமராவதி புடவையால் வாய் மற்றும் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் படுகாயங்களுடன் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அவர்கள் உடனடியாக நாட்டறம்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டியை சிகிச்சைக்காக நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வாணியம்பாடி துணைபோலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இது குறித்து நாட்டறம்பள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மூதாட்டியை தாக்கி, கட்டிப்போட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






