150 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்


150 கிலோ கெட்டுப்போன கோழி இறைச்சி பறிமுதல்
x

தஞ்சையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன கோழி இறைச்சி 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர். இதில் கெட்டுப்போன கோழி இறைச்சி 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

சவர்மா சாப்பிட்ட மாணவி பலி

நாமக்கல் மாவட்டத்தில் தனியார் ஓட்டலில் சவர்மா வாங்கி சாப்பிட்ட 9-ம் வகுப்பு மாணவி பலியானார். மேலும் 4 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவத்தையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.தஞ்சை மாவட்டத்தில் நேற்று முன்தினம் சோதனை நடத்தி கெட்டுப்போன கோழி இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் நேற்று 2-வது நாளாக தஞ்சையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் சித்ரா தலைமையில் மாநகராட்சி மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ்காந்தி முன்னிலையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

150 கிலோ கோழி இறைச்சி பறிமுதல்

தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் தெரு, கீழராஜவீதி, கரந்தை, தென்கீழ் அலங்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். இந்த சோதனையின் போது கடைகளில் குளிர்சாதன பெட்டிகளில் வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி, அதிக கலர் பொடி தடவி வைக்கப்பட்டு இருந்த கோழி இறைச்சி, பயன்படுத்திய எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்துவதற்காக வைத்திருந்தது, கெட்டுபோன நூடுல்ஸ் உள்ளிட்ட உணவுப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.இது குறித்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா கூறுகையில், தஞ்சையில் 5-க்கும் மேற்பட்ட ஓட்டல்களில் சோதனை நடத்தப்பட்டு கெட்டுப்போன கோழி இறைச்சிகள் 150 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் முதல்நாளே தயாரித்து குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்டு இருந்த உணவுப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த சோதனையின் போது மீண்டும் தவறு செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட ஓட்டல்களின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், சீல் வைக்கப்படும் என்றார்.


Next Story