1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை


1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
x
தினத்தந்தி 15 Sep 2023 6:45 PM GMT (Updated: 15 Sep 2023 6:45 PM GMT)

செஞ்சியில் நடைபெற்ற விழாவில் 1,500 பெண்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை அமைச்சர் செஞ்சி மஸ்தான் வழங்கினார்.

விழுப்புரம்

செஞ்சி

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி மகளிருக்கு மாதந் தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமான மகளிா் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை காஞ்சீபுரத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். தொடர்ந்து அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். அதன்படி செஞ்சியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவி தேஜா தலைமை தாங்கினார். ஒன்றியக்குழு தலைவர்கள் விஜயகுமார், கண்மணி நெடுஞ்செழியன், அமுதா ரவிக்குமார், யோகேஸ்வரி மணிமாறன், அனந்தபுரம் பேரூராட்சி தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செஞ்சி பேரூராட்சி மன்ற தலைவர் மொக்தியார் அலி மஸ்தான் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 1,500 மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டையை வழங்கி பேசினார். அப்போது ஒரே கையெழுத்தில் ஒரு கோடியே 6½ லட்சம் மகளிர் பயன்பெறும் வகையில் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்-அமைச்சர் செயல்படுத்தி உள்ளார். பெண்கள் உயர்கல்வி பெறுவதற்கு புதுமைப்பெண் திட்டம், காலை உணவு திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வரும் முதல்-அமைச்சர் உலகத்திலேயே சிறந்த திட்டமாக பெண்களின் வாழ்வாதாரத்துக்கு உறுதுணையாக ஒரு திட்டமான கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை தொடங்கி வைத்ததை பெண்கள் வரவேற்று மகிழ்ச்சியுடன் முதல்-அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளனர் என்றார்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ஷீலா தேவிசேரன், செஞ்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஜெயபாலன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, விவசாய அணி அஞ்சாஞ்சேரி கணேசன், தாசில்தார் முகமது அலி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், நகர செயலாளர் கார்த்தி மற்றும் ஒன்றிய செயலாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். முடிவில் செஞ்சி தாசில்தார் கார்த்திகேயன் நன்றி கூறினார்.


Next Story