தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டிய 155 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்


தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டிய 155 கட்டிடங்கள் இடித்து தரைமட்டம்
x
தினத்தந்தி 16 Oct 2023 9:30 PM GMT (Updated: 16 Oct 2023 9:30 PM GMT)

தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமித்து கட்டிய 155 கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.

தேனி

தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்ததால் வாய்க்கால் பரப்பளவு சுருங்கி, மழைநீர் வடிந்து செல்லக்கூட வழியின்றி போனது. இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் கடந்த 13-ந்தேதி அதிரடியாக தொடங்கியது. முதல் 2 நாட்களிலும் மக்கள் போராட்டம், எதிர்ப்புகளை மீறி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடிக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகள் நடக்கவில்லை.

இந்தநிலையில் நேற்று ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்றது. பெரியகுளம் ஆர்.டி.ஓ. முத்துமாதவன் தலைமையில் 3-வது நாளாக பலத்த பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. தேனி பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோவில் தெரு, மதுரை சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்பு கட்டிடங்கள், வாய்க்காலில் அமைக்கப்பட்டு இருந்த வாகன நிறுத்த தளங்கள் ஆகியவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. சில வீடுகளில் படிக்கட்டுகள் முன் பால்கனி போன்றவை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டு இருந்தன. அவையும் இடிக்கப்பட்டன.

இந்த வாய்க்காலில் 166 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு இருந்தது. நேற்று மாலை வரை 155 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. அடுத்த சில நாட்களிலும் பணிகள் தீவிரமாக நடக்க இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story