15-வது ஆண்டு விழா: மல்லை தமிழ் சங்கத்துக்கு முதல்-அமைச்சர் வாழ்த்து
தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை என முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார் .
சென்னை,
மல்லை தமிழ் சங்கத்தின் 15-வது ஆண்டு விழாவையொட்டி அதன் தலைவர் மல்லை சத்யாவுக்கு முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி உள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது,
தமிழ்ச் சமூகத்தின் சிறந்த ஆளுமைகளை ஆண்டுதோறும் தேர்வு செய்து பெருந்தமிழன், பெருந்தச்சன், மாமல்லன் ஆகிய விருதுகளை வழங்கி வரும் மல்லை தமிழ்ச் சங்கத்தின் பெருந்தொண்டை உளமாரப் பாராட்டுகிறேன்.இதுபோன்ற அமைப்புகளால்தான் தமிழின் வேரும், விழுதுகளும் வலுப்பெற்றும், வளம் பெற்றும் யாராலும் வீழ்த்த முடியாத வலிமையுடன் திகழ்கின்றன.
மொழிக்காக தங்கள் இன்னுயிரையே ஈந்த தீரமிகு இனம் நமது தமிழினம். அத்தகைய தீரமும், வீரமும் என்றென்றும் குன்றாமல் இருக்க மல்லைத் தமிழ்ச் சங்கம் போன்ற தமிழ் அமைப்புகளின் தொண்டறமும், தொடர் பணியும் என்றென்றும் தேவை.மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் 15-வது ஆண்டு தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பிக்கும் அன்பர்களுக்கும், விழாவில், "பெருந்தமிழன் விருது" பெறும் வி.ஐ.டி. நிகர்நிலைப் பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன், "பெருந்தச்சன்" விருது பெறும் மரபுக் கட்டிடக் கலைஞர் பா.குமரேசன், மாமல்லன் விருது பெறும் கிராண்ட் மாஸ்டர் ஷிகான் கனகராஜ் ஆகிய மூன்று பேராளுமைகளுக்கும், இந்த அமைப்பையும், விழாவையும் சிறப்புற நடத்தும் மல்லை சத்யாவுக்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.தமிழுக்குத் தொண்டு செய்வோர் தாழ்வதில்லை.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.