பா.ஜனதாவை கண்டித்து 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் -கே.எஸ்.அழகிரி


பா.ஜனதாவை கண்டித்து 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம் -கே.எஸ்.அழகிரி
x

100 நாள் வேலை திட்டத்தை சிதைக்கும் பா.ஜனதாவை கண்டித்து 15-ந்தேதி காங்கிரஸ் கட்சி ஆர்ப்பாட்டம்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் 2005-ல் நிறைவேற்றப்பட்டு கிராமப்புறங்களைச்சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது. உலகிலேயே முதன்முறையாக இந்தியாவில் கொண்டு வரப்பட்ட ஒரு வறுமை ஒழிப்பு திட்டமாகும்.

ஆனால், இத்திட்டம் காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டதால் ஒன்றிய பா.ஜனதா அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் தற்போது மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதியின் மூலமாக மொத்த பயனாளிகளான 6.49 கோடி குடும்பங்களில் 10 சதவீதத்தினர் மட்டும்தான் 100 நாள் வேலைவாய்ப்பை இதுவரை பெற்றுள்ளனர். மீதியுள்ளவர்களுக்கு வேலைவாய்ப்பு மறுக்கப்படுவதால் கிராமப்புற தொழிலாளர்கள் புலம் பெயர்கிற அவலநிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்து, சின்னாபின்னமாக்கும் மத்திய பா.ஜனதா அரசைக்கண்டித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பாக அனைத்து வட்டாரங்களிலும் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் முன்பாக வருகிற 15-ந்தேதி காலை 11 மணியளவில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story