தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து 16 பேர் காயம்
விழுப்புரம் அருகே தனியார் பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அமைச்சர் பொன்முடி நேரில் ஆறுதல் கூறினார்
விக்கிரவாண்டி
தனியார் பஸ் கவிழ்ந்தது
திண்டிவனத்தில் இருந்து விழுப்புரம், பண்ருட்டி வழியாக நெய்வேலிக்கு நேற்று காலை 6.15 மணியளவில் தனியார் பஸ் ஒன்று புறப்பட்டது. இந்த பஸ்சில் 40-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை, திண்டிவனம் அருகே சித்தணியை சேர்ந்த சபரிநாதன்(வயது 36) என்பவர் ஓட்டினார். விழுப்புரம் அருகே எடப்பாளையத்தை சேர்ந்த மோகன்தாஸ்(42) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.
இந்த பஸ் காலை 7.30 மணியளவில் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் அருகே பஞ்சமாதேவி பஸ் நிறுத்தத்தில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. சிறிது தூரத்தில் ஒரு வளைவில் திரும்பும்போது எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் மீது மோதாமல் இருக்க டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார்.
இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் அருகில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி இடதுபுற சாலையோர பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
16 பேர் காயம்
இதில் பஸ்சின் இடிபாடுகளுக்குள் சிக்கிய பயணிகளை அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மீட்டனர். இதற்கிடையே விபத்து பற்றிய தகவல் அறிந்து வந்த வளவனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார், தீயணைப்பு வீரர்கள் பொதுமக்கள் உதவியுடன் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த விபத்தில் திருக்கோவிலூர் அய்யம்பேட்டையை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் மனைவி பாமா(34), வானூர் பள்ளித்தென்னலை சேர்ந்த பழனி(68), விழுப்புரம் ஜெகநாதபுரம் கருணாநிதி மனைவி சுபஸ்ரீ(37), அபிதா(18), விழுப்புரம் பனங்குப்பம் முருகன்(39), பண்ருட்டி செம்மேடு பட்டாபி மனைவி மங்கவரம்(40), கோலியனூர் ராஜாக்கண்ணு(43), தூத்துக்குடி மாவட்டம் அக்கநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜா(41), அவரது மனைவி நித்யகல்யாணி(38), இவர்களது மகன் ஹரிஷ்சுதர்சன்(10), மகள் முத்துவர்ஷினி(8), விழுப்புரம் சாலையாம்பாளையம் சரவணன் மனைவி புஷ்பா(32), உளுந்தூர்பேட்டை சிவாபட்டினத்தை சேர்ந்த சம்பத் மனைவி ஜோதிலட்சுமி(50), திண்டிவனம் தென்களவாய் மித்திலீஸ்வரன்(28) மற்றும் பஸ் டிரைவர் சபரிநாதன், கண்டக்டர் மோகன்தாஸ் ஆகிய 16 பேர் காயமடைந்தனர்.
தீவிர சிகிச்சை
உடனே அவர்கள் அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பின்னர் மற்ற பயணிகள் அனைவரும் மாற்று பஸ்கள் மூலம் அவரவர் செல்ல வேண்டிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தொடர்ந்து, மீட்பு வாகனம் வரவழைக்கப்பட்டு கவிழ்ந்து கிடந்த பஸ் அப்புறப்படுத்தப்பட்டது. இந்த விபத்து குறித்து வளவனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமைச்சர் ஆறுதல்
இதனிடையே விபத்து குறித்த தகவலை அறிந்ததும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
அதோடு, விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் உயர் சிகிச்சை அளிக்குமாறு அங்கிருந்த டாக்டர்களுக்கு அறிவுறுத்தினார்.
அப்போது மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் கீதாஞ்சலி, முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.