விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள்


விழுப்புரம் மாவட்டத்தில் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள்
x
தினத்தந்தி 27 Oct 2023 6:45 PM GMT (Updated: 27 Oct 2023 6:45 PM GMT)

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படப்பட்ட நிலையில் மாவட்டத்தில் மொத்தம் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்டத்தில் 1.1.2024-ஐ தகுதி ஏற்பு நாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள், மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளிலும் நேற்று முதல் தொடங்கியது. இப்பணிகள் 9.12.2023 வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியலை நேற்று காலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் கலெக்டர் பழனி வெளியிட்டார். அதன் பின்னர் அவர் கூறியதாவது:-

16,49,832 வாக்காளர்கள்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 5.1.2023 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி 7 சட்டமன்ற தொகுதிகளில் 8,34,394 ஆண் வாக்காளர்களும், 8,55,708 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 213 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 90 ஆயிரத்து 315 வாக்காளர்கள் இருந்தனர்.

5.1.2023 முதல் பெறப்பட்ட விண்ணப்பங்களின்படி படிவம் 7-ன் மூலம் பெயர் நீக்கம் கோரியவர்கள், இறந்தவர்கள், குடிபெயர்ந்தவர்கள், 2 இடங்களில் பெயர் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் 23,038 ஆண்கள், 27,963 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 13 பேர் என மொத்தம் 51,014 வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். தற்போது 4,611 ஆண்கள், 5,912 பெண்கள், மூன்றாம் பாலினத்தினர் 8 பேர் என மொத்தம் 10,531 வாக்காளர்கள் புதியதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதன் அடிப்படையில் மாவட்டத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி 7 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து 8 லட்சத்து 15 ஆயிரத்து 967 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 33 ஆயிரத்து 657 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தினர் 208 பேரும் ஆக மொத்தம் 16 லட்சத்து 49 ஆயிரத்து 832 வாக்காளர்கள் உள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்கு...

வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் சப்-கலெக்டர், கோட்டாட்சியர், தாலுகா, நகராட்சி அலுவலகங்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர், நியமன வாக்குச்சாவடி அமைவிடங்கள் ஆகிய இடங்களில் வாக்காளர் பட்டியல் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய தேர்தல் ஆணைய இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர்களாக பெயர்கள் பதிவு செய்யப்பட்ட விவரத்தை சரிபார்த்துக்கொள்ளலாம். 2023-வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தப்பணிகளின் கீழ் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் வருகிற 9.12.2023 வரை அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம் மற்றும் இணையதளம் (www.nvsp.in) மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு முகாம்கள்

மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பாக வருகிற 4.11.2023 (சனிக்கிழமை), 5.11.2023 (ஞாயிற்றுக்கிழமை), 18.11.2023 (சனிக்கிழமை), 19.11.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.

கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனை மனுக்கள் மீது 26.12.2023 அன்று முடிவு செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2024 அன்று வெளியிடப்படும். பொதுமக்கள் வாக்காளர் பட்டியல் தொடர்பாக தகவல்கள் ஏதும் தேவைப்பட்டால் அலுவலக வேலை நாட்களில், வேலை நேரங்களில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் வாக்காளர் சேவை மைய தொலைபேசி எண் 1950-ஐ தொடர்பு கொண்டு தேவையான விவரங்களை பெற்றுக்கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சேமிப்பு கிடங்கில் ஆய்வு

முன்னதாக மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் பழனி, பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


Next Story