ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.16 லட்சம் மோசடி
அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ஓய்வுபெற்ற வங்கி ஊழியரிடம் ரூ.16 லட்சம் மோசடி செய்த திண்டிவனம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது செய்யப்பட்டார்.
அரசு வேலை வாங்கித்தருவதாக...
விழுப்புரம் சாலாமேடு காமராஜர் நகர் விரிவு குறுக்கு தெருவை சேர்ந்தவர் பழனிவேலு (வயது 60). இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தப்பேட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஊழியராக பணியாற்றி வந்தபோது பழனிவேலுவுக்கும் டி.கீரனூரை சேர்ந்த அப்துல்ஜப்பார் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது.
அப்போது பழனிவேலு, தனது மகள்களுக்கு அரசு வேலை விஷயமாக அப்துல்ஜப்பாரிடம் பேசினார். அதற்கு அவர், தனது நண்பரான திண்டிவனம் சஞ்சீவிராயன்பேட்டை பகுதியை சேர்ந்த முகமதுஷெரீப் (45) என்பவர் மூலமாக அரசு வேலை வாங்கித்தருவதாக கூறினார்.
ரூ.16 லட்சம் மோசடி
இதை நம்பிய பழனிவேலு, தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தரும்படி கேட்டு முகமதுஷெரீப், அப்துல்ஜப்பார் ஆகிய இருவரிடமும் ரூ.16 லட்சத்தை கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் இருவரும், பழனிவேலுவின் மகள்களுக்கு அரசு வேலை ஏதும் வாங்கித்தராமல் காலம் கடத்தி வந்துள்ளனர்.
இதனால் அவர்கள் இருவரையும் பழனிவேலு பலமுறை சந்தித்து தனது மகள்களுக்கு அரசு வேலை வாங்கித்தரும்படியும், இல்லையெனில்தான் கொடுத்த பணத்தை திருப்பித்தரும்படியும் வற்புறுத்தி வந்தார். ஆனால் பழனிவேலுக்கு பணத்தை கொடுக்காமல் அவர்கள் இருவரும் ஏமாற்றி மோசடி செய்துவிட்டனர்.
நகரமன்ற முன்னாள் துணைத்தலைவர் கைது
இதுகுறித்து பழனிவேலு, விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதாவிடம் புகார் மனு கொடுத்தார். இம்மனுவை பெற்ற அவர், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் முகமதுஷெரீப், அப்துல்ஜப்பார் ஆகிய இருவரின் மீதும் நம்பிக்கை மோசடி, கூட்டுசதி செய்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சம்பத்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் திண்டிவனம் பகுதியில் நேற்று முகமதுஷெரீப்பை போலீசார் கைது செய்தனர். கைதான இவர், திண்டிவனம் நகரமன்ற முன்னாள் துணைத்தலைவராகவும், அ.தி.மு.க.வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளராகவும் இருந்தார். தற்போது அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு சசிகலா அணியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.