ராமேசுவரம் மீனவர்கள் 16 பேரை சிறைபிடித்த இலங்கை கடற்படை
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரத்தை சேர்ந்த 16 மீனவர்களை இலங்கை படையினர் சிறைபிடித்துச் சென்றனர். அவர்களின் 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
ராமேசுவரம்
16 மீனவர்கள் சிறைபிடிப்பு
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து நேற்று 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் சுமார் 2 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.
அப்போது 2 ரோந்து கப்பல்களில் வந்த இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் ராமேசுவரத்தை சேர்ந்த 16 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக சிறைபிடித்து கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
மீனவ அமைப்புகள் வேதனை
16 மீனவர்களிடமும் இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தினர். ஆனால், அவர்கள் பெயர் விவரம் எதுவும் வெளியிடப்படவில்லை.
ஆனால், அந்த மீனவர்கள் பற்றிய தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீசார் சேகரித்து வருகின்றனர். தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் போக்குவரத்து தொடங்கிய நாளில், மீனவர்கள் சிறைபிடிப்பு சம்பவம் நடந்து இருப்பது வேதனை அளிக்கிறது என மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.