விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கம்


விழுப்புரம் அருகே    தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கம்
x

விழுப்புரம் அருகே தேனீக்கள் கொட்டியதில் 16 மாணவ, மாணவிகள் மயக்கமடைந்தனர்.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே வடவாம்பலம் கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 260 மாணவ- மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு தோட்டத்திலிருந்து பறந்து வந்த தேனீக்கள் கூட்டம், பள்ளி வகுப்பறைகளில் இருந்த மாணவ, மாணவிகளை கொட்டியது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த மாணவ- மாணவிகள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடினர். இருந்தபோதிலும் தேனீக்கள் கொட்டியதில் வடவாம்பலத்தை சேர்ந்த மாணவ- மாணவிகளான ஷியாம்சுந்தர், சக்திமுருகன், சக்திபாலன், ராகப்பிரியா, முத்தழகி உள்பட 16 பேர் பாதிக்கப்பட்டு மயக்கமடைந்தனர். உடனடியாக அந்த மாணவ- மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனிடையே தகவல் அறிந்ததும் விழுப்புரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் லட்சுமணன், அரசமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நேரில் சென்று அங்கு சிகிச்சை பெற்று வந்த மாணவ- மாணவிகளை பார்வையிட்டு அவர்களிடம் நலம் விசாரித்தார். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் காளிதாஸ், தாசில்தார் ஆனந்தகுமார், கோலியனூர் ஒன்றியக்குழு தலைவர் சச்சிதானந்தம், ஒன்றிய செயலாளர்கள் பிரபாகரன், தெய்வசிகாமணி, மும்மூர்த்தி, மாவட்ட கவுன்சிலர் தமிழ்செல்வி கேசவன், ஒன்றிய கவுன்சிலர் ராஜ்குமார், ஊராட்சி மன்ற தலைவர் லிங்கேஸ்வரி ஜவகர் உள்பட பலர் உடனிருந்தனர். மேலும் உடனடியாக அப்பகுதியில் உள்ள தேனீக்கள் கூட்டை அகற்றுமாறு லட்சுமணன் எம்.எல்.ஏ. உத்தரவிட்டதன்பேரில் தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து வந்து தண்ணீரில் மருந்து தெளித்து அந்த தேனீக்கள் கூட்டை அகற்றினர்.


Next Story