ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை


ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்கு எண்ணிக்கை
x

இடைத்தேர்தலில் 16 மேஜைகள் அமைத்து வாக்குகள் எண்ணப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. அதற்கான வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் (மார்ச்) 2-ந்தேதி சித்தோடு ஐ.ஆர்.டி.டி. கல்லூரியில் நடைபெறுகிறது. இந்தநிலையில் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன்பிறகு மாவட்ட கலெக்டா் கிருஷ்ணனுண்ணி நிருபர்களிடம் கூறியதாவது:-

இடைத்தேர்தலில் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், 2 அறைகளில் வாக்குகள் எண்ணப்படுகின்றன. ஓரிரு நாட்களில் ஏற்பாடு பணிகள் நிறைவடையும். தரைதளத்தில் உள்ள அறையில் 10 மேஜைகளும், மேல் தளத்தில் உள்ள அறையில் 6 மேஜைகளும் என மொத்தம் 16 மேஜைகள் அமைக்கப்படுகிறது. ஒவ்வொரு மேஜையிலும் 3 அலுவலர்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுவார்கள்.

3 அடுக்கு பாதுகாப்பு

வாக்கு எண்ணும் மையத்துக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்படுகிறது. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்படும் அறைகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். தேர்தல் விதி மீறல் தொடர்பாக 234 புகார்கள் பெறப்பட்டு, அதில் 71 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமார் உடனிருந்தார்.


Next Story