ரூ.1,600 கோடி முதலீட்டில் 6,000 பேருக்கு வேலை வாய்ப்புகள்-அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி
தமிழகத்தில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் 6,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
ராணிப்பேட்டை
தமிழகத்தில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் 6,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தொழில்துறை மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பங்கேற்றார். இதில் கலந்து கொள்ள வந்த அவருக்கு கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து பாரதி நகரில் உள்ள தனியார் விடுதியில் தோல் தொழிற்சாலை உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி, ஆற்காடு சட்டமன்ற உறுப்பினர் ஜெ.எல்.ஈஸ்வரப்பன், சிப்காட் மேலாண்மை இயக்குனர் சுந்தரவள்ளி, தி.மு.க. சுற்றுச்சூழல் அணி மாநில துணைச் செயலாளர் வினோத் காந்தி, ஜி.கே.குழுமம் சந்தோஷ் காந்தி, பி.ஆர்.சி.ரமேஷ் பிரசாத், ஜெயசந்திரன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கூறியதாவது:-
தமிழகத்தில் தொழில்துறை முதலீடுகள் குறித்து பா.ஜ.க. பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது. தமிழகத்தில் ஹோன்-ஹாய் நிறுவனத்தின் சார்பில் ரூ.1,600 கோடி முதலீட்டில் உதிரிபாகங்கள் தயாரிக்கும் புதிய தொழிற்சாலையை ஏற்படுத்தி அதன் மூலம் 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் உருவாக்கப்படும்.
ஆனால் பா.ஜ.க.வினர் இதை சரியாக விசாரிக்காமல் ஒப்பந்தம் குறித்து தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். தமிழகத்தில் தொழில்துறை வளர்ச்சியை பாரதிய ஜனதா கட்சியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
அதிக அளவில் தொழில்துறை முதலீடுகளை ஈர்த்து தமிழக அரசு நிச்சயம் சாதனை படைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.