திருக்கோவிலூர் அருகே 16-ம் நூற்றாண்டின் கல்வெட்டு, செப்பு நாணயம் கண்டெடுப்பு


திருக்கோவிலூர் அருகே 16-ம் நூற்றாண்டின் கல்வெட்டு, செப்பு நாணயம் கண்டெடுப்பு
x
தினத்தந்தி 19 Jun 2023 12:15 AM IST (Updated: 19 Jun 2023 6:51 AM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூர் அருகே 16-ம் நூற்றாண்டின் கல்வெட்டு, செப்பு நாணயம் கண்டெடுக்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி

திருக்கோவிலூர்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் தாலுகா மணலூர்பேட்டை அருகில் உள்ள சித்தப்பட்டினத்தில் வரலாற்று ஆய்வு நடுவம் சிங்கார உதியன் தலைமையில் ஆய்வாளர்கள் விழுப்புரம் சி.வீரராகவன், நல்நூலகர் மு.அன்பழகன், ஆகியோர் கள ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள சிவன் கோவிலுக்கு முன்பு மண்ணில் புதைந்திருந்த ஒரு பலகை கல்வெட்டை கண்டெடுத்தனர். அந்த கல்வெட்டில் முன்பக்கத்தில் 22 வரிகளும், பின்பக்கத்தில் 27 வரிகளும் எழுதப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டு 16-ம் நூற்றாண்டில் விஜயநகரப் பேரரசு அச்சுததேவ மகாராயர் ஆட்சிக்காலத்தில் வெட்டப்பட்டது என்றும், அதில் உள்ள எழுத்துக்கள் விஜயநகர காலத்துக்கு உரியது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

மேலும், கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கு அருகே, செப்பு நாணயமும் கண்டெடுக்கப்பட்டது. இது 16-ம் நூற்றாண்டை சேர்ந்த பாமினி சுல்தானுடைய ஆட்சிக்காலத்தில் பயன்பாட்டில் இருந்த நாணயமாகும். இந்த நாணயம் 5 முனைகளை கொண்டதாகும். இதன் முன்பக்கம் முகடுகளில் நதியின் உருவமும், அதன் மறுபக்கம் பாரசீக மொழியில் பாமினி சுல்தான் மன்னரான 'அசன்சா' என்ற பெயரும் அச்சிடப்பட்டுள்ளது. ஆய்வின் போது, இளங்கவி சண்முகம், க.ரவிச்சந்திரன், நூலகர்கள் மு.சாந்தி, ச.தேவி, மு.கோவிந்தன், பெ. விக்னேஷ், கி.பாஸ்கரன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story