புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேர் கைது
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
விசைப்படகில்...
புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள மீனவர்கள் தினந்தோறும் விசைப்படகுகளில் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருவது வழக்கம்.
இந்நிலையில் நேற்று முன்தினம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியிலிருந்து சுமார் 350-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
இதில் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த கர்ணிக்கர் மகன் தமிழரசன் (வயது 39) என்பவருக்கு சொந்தமான விசைப்படகில், இவரும், அதே பகுதியை சேர்ந்த சிங்காரம் மகன் பாஸ்கர் (40), ஊட்டி மகன் முத்துராஜா (25), தனபால் மகன்கள் அமரன் (30), ஜெகநாத் (35), சுப்பையா மகன் குமார் (43) ஆகிய 6 மீனவர்களும், அதே பகுதியை சேர்ந்த உதயகுமார் (60) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் இவரும், இவரது மகன்களான ரவீந்திரன் (40), உலகநாதன் (35), வைத்தியநாதன் (27), அருள்நாதன் (23), முத்து மகன் குமரேசன் (40) ஆகிய ஆறு மீனவர்களும் கடலுக்கு சென்றனர்.
17 மீனவர்கள் கைது
இதேேபால் அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து மகன் அகிலா (40) என்பவருக்கு சொந்தமான மற்றொரு விசைப்படகில் ரங்கநாதன் மகன் காளிமுத்து (45), அர்ஜுனன் (50), சிவபெருமாள் மகன் குமார் (42), முனியசாமி மகன் அருண் (22), நடராஜன் மகன் குருமூர்த்தி (27) ஆகிய 5 போ் என மொத்தம் 17 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் 17 பேரும் 32 நாட்டிகள் கடல் மைல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் 3 விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 17 பேரையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி கைது செய்து, அவர்களது 3 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கொந்தளிப்பு
இதையடுத்து கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் இலங்கையில் உள்ள காங்கேசன் கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணைக்கு பின்னர் 17 மீனவர்களையும், ஊர்க்காவல் படை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
மீன்பிடி தடைக்காலம் முடிந்து 5 நாட்களிலேயே தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்த சம்பவம் புதுக்கோட்டை மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை
இதுகுறித்து ஜெகதாப்பட்டினம் விசைப்படகு சங்க நிர்வாகிகள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஆனால் மீனவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் தற்போது கடலுக்கு மீன்பிடிக்க சென்ற எங்கள் பகுதியின் மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் மிகவும் கண்டனத்துக்குரியது. இலங்கை கடற்படையினரின் அட்டூழியம் நாளுக்கு நாள் தொடர்ந்து கொண்டே போகிறது. ஏற்கனவே மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது.
தற்போது, இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேலும் பாதிப்படைய செய்யும். இதனால் அந்த மீனவர்களின் ஒட்டுமொத்த குடும்பமும் சோகத்தில் மூழ்கியுள்ளது. எனவே மத்திய, மாநில அரசுகள் இலங்கை அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அவர்களது விசைப்படகையும் விடுவிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.