மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு-போலீசார் விசாரணை


மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு-போலீசார் விசாரணை
x

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டியில் வீடு புகுந்து 17 பவுன் நகை திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வீடு திறந்து கிடந்தது

பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி கருப்பராயன் நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 61) என்பவர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இவர்களது மகன் சென்னையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இதன் காரணமாக மகனின் குழந்தைகளை கவனித்து கொள்வதற்கு அடிக்கடி சென்னை செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 21-ந்தேதி வீட்டை பூட்டி விட்டு செல்வம் தனது மனைவியுடன் சென்னை சென்றார். இதற்கிடையில் வீட்டின் முன்பக்க கதவு திறந்து கிடப்பதாக அக்கம், பக்கத்தினர் செல்வத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து சென்னையில் இருந்து வந்த செல்வம் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.

போலீசார் விசாரணை

அப்போது உள்ளே இருந்த பீரோ திறந்து கிடந்தது. வீட்டின் இருந்த பொருட்களும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகைகள் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வீட்டில் பதிந்து இருந்த ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் ரூ.1 லட்சத்து 70 ஆயிரம் மதிப்புள்ள 17 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து பொள்ளாச்சி பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.


Next Story