கர்ப்பிணிகள் உள்பட 175 பேர் எச்ஐவியால் பாதிப்புகடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனை மூலம் 4,355 பேருக்கு சிகிச்சை
ஒரே ஆண்டில் 10 கர்ப்பிணிகள் உள்பட 175 பேர் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்ட கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனை மூலம் 4.355 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1-ந் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆண்டு தோறும் எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மையக் கருத்தினை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டின் மைய கருத்தாக சமப்படுத்துதல் என்ற கருத்தினை வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று எய்ட்ஸ் தின சமப்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் ரமேஷ்பாபு முன்னிலை வகித்தார். மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் திட்ட மேலாளர் செல்வம் வரவேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் மீரா, திட்டம் குறித்து விளக்க உரையாற்றினார்.
நம்பிக்கை மையங்கள்
நிகழ்ச்சியில் கலெக்டர் பாலசுப்பிரமணியம் பேசியதாவது:-
எச்.ஐ.வி. பரவலானது இந்திய அளவில் 0.21 சதவீதமும், தமிழ்நாடு அளவில் 0.18 சதவீதமும், கடலூர் மாவட்டம் 0.22 சதவீதமும் உள்ளது. மாவட்டத்தில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகின் கீழ் 25 ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் (நம்பிக்கை மையங்கள்), 73 எளிதாக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஆற்றுப்படுத்துதல் மற்றும் பரிசோதனை மையங்களும் செயல்படுகிறது. எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலமும், முன்கூட்டியே தன்னார்வமாக பரிசோதனை செய்து கொள்வதன் மூலமும் நாம் சமுதாயத்தை எச்.ஐ.வி. தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
மேலும் எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் தொடர் சிகிச்சையான ஏ.ஆர்.டி. கூட்டு மருந்து உட்கொள்வதாலும், ஊட்டச்சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வதாலும் தங்களது வாழ் நாட்களை நீட்டித்துக் கொள்வதோடு, தங்களது குழந்தைகளை பாதுகாக்கவும், தங்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும்.
10 கர்ப்பிணிகள் பாதிப்பு
மாவட்டத்தில் கடந்த ஆண்டு 80 ஆயிரத்து 340 பேருக்கு எச்.ஐ.வி. பரிசோதனை செய்யப்பட்டதில் 10 கர்ப்பிணிகள் உள்பட 175 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனை மற்றும் விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் இதுவரை எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 4,355 பேருக்கு ஏ.ஆர்.டி. கூட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் எச்.ஐ.வி. தொற்றுள்ளவர்களுக்கு விதவை உதவித்தொகை, தையல் எந்திரம், இலவச வீட்டுமனை பட்டா, இலவச பஸ் பாஸ், சலவை பெட்டி, தாட்கோ கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு உதவித்தொகையும் வழங்கப்படுகிறது. தற்போது ஆட்டோக்களில் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு அவற்றின் மூலம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும் எச்.ஐ.வி. மற்றும் எய்ட்ஸ், பால்வினை நோய், காசநோய் குறித்து இரண்டு கலைக்குழுவின் மூலம் மாவட்டம் முழுவதும் 40 கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் காசநோய் பிரிவு துணை இயக்குனர் கருணாகரன், ஏ.ஆர்.டி.மைய முதன்மை மருத்துவ அலுவலர் தேவ்ஆனந்த், மருத்துவ அலுவலர் ஸ்ரீதரன், மாவட்ட எச்.ஐ.வி. உள்ளோர் சங்க தலைவர் ராஜேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் கதிரவன் நன்றி கூறினார்.