18 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடியில் பள்ளி கட்டிடங்கள்


18 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடியில் பள்ளி கட்டிடங்கள்
x

18 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திருவண்ணாமலை

18 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி கட்டிடங்களை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

திறந்து வைத்தார்

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 18 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.18 கோடியே 2 லட்சம் மதிப்பில் 65 பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார்.

அதைதொடர்ந்து துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதலம்பாடி ஊராட்சியில் புதிதாக கட்டப்பட்ட பள்ளி கட்டிடத்தினை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசியதாவது:-

சிறப்பான ஆட்சி

தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று 2½ ஆண்டுகளில் மக்கள் பயன்பெறும் அளவில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சிறப்பான முறையில் தமிழகத்தில் ஆட்சி செய்து வருகிறார். முதல்- அமைச்சர் பள்ளிக் குழந்தைகள் மழைகாலங்களிலும் இன்னல்கள் அடையக்கூடாது என்ற உன்னத நோக்கத்தில் இன்றைய தினம் புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்து உள்ளார்.

மேலும் பணிக்கு செல்லும் பெண்களுக்கு இலவச பஸ் பயண திட்டம் மற்றும் தமிழ்வழியில் கல்வி பயின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதம் தோறும் ரூ.1000 வழங்கும் திட்டமான புதுமைப் பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்.

தற்போது 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பள்ளி பயிலும் மாணவர்களுக்கு முதல்- அமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தி குழந்தைகளின் ஆரோக்கியத்தை காத்து வருகிறார்.

மகளிர் உரிமை தொகை

இந்தியாவிலேயே முதன்முதலில் தமிழக முதல்-அமைச்சர் தான் வறுமைநிலையில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு தகுதியின் அடிப்படையில் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தினை தொடங்கி வைத்து தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணாதுரை எம்.பி., கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) செ.அ.ரிஷப், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி, மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், துரிஞ்சாபுரம் ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, ஊராட்சி மன்ற தலைவர் சக்திவேல், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story