18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள்
7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலில் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் உள்ளனர்.
இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் விசாகன், அரசியல் கட்சியினர் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார்.
இதில் 7 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்தம் 9 லட்சத்து16 ஆயிரத்து 285 ஆண்கள், 9 லட்சத்து 68 ஆயிரத்து 393 பெண்கள், 214 திருநங்கைகள் மொத்தம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 892 வாக்காளர்கள் இடம்பெற்று இருக்கின்றனர். மேலும் ஆண்களை விட 52 ஆயிரத்து 108 பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.
பொதுமக்கள் பார்வை
இதையடுத்து இறுதி வாக்காளர் பட்டியலின் நகல் மாவட்டத்தில் உள்ள 1,205 வாக்குச்சாவடி மையங்கள், கலெக்டர் அலுவலகம், ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாலுகா அலுவலகங்களில் பொதுமக்களின் பார்வைக்காக வைக்கப்பட இருக்கிறது. இதனை பொதுமக்கள் பார்வையிட்டு தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று இருக்கிறதா? என்று உறுதி செய்து கொள்ளலாம் என்று விசாகன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, உதவி கலெக்டர் பிரியங்கா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமர்நாத், ஆர்.டி.ஓ.க்கள் பிரேம்குமார். சிவக்குமார், தேர்தல் தாசில்தார் சரவணன் உள்ளிட்ட அதிகாரிகள், அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.