காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்


காளைகள் முட்டியதில் 18 பேர் காயம்
x

காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர்.

திருச்சி

மணப்பாறை:

ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த மஞ்சம்பட்டியில் உள்ள புனித வனத்து அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ், மணப்பாறை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமநாதன் ஆகியோர் கொடியசைத்து ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார். முதலில் வாடிவாசலில் இருந்து கோவில் காளையும், பின்னர் வழக்கப்படி செவலூர் சின்னாக் கவுண்டர் காளையும் அவிழ்த்து விடப்பட்டன.

அதைத்தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்டன. சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிபோட்டு காளையர்கள் அடக்க முயன்றனர். வீரர்களை காளைகள் முட்டித்தூக்கி வீசி பந்தாடியும், கால்களால் உதைத்தும் சென்றன. இருப்பினும் வீரர்கள் காளைகளுடன் மல்லுக்கட்டி, திமிலை பிடித்து அடக்கினர்.

18 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் மொத்தம் 660 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 166 மாடுபிடிவீரர்கள் களம் கண்டனர். பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும், காளையை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், பீரோ, சில்வர் பாத்திரங்கள், வெள்ளி நாணயங்கள் என பல்வேறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன.

காளைகள் முட்டியதில் 18 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அதே பகுதியில் உள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் படுகாயமடைந்த ஒருவர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஜல்லிக்கட்டையொட்டி திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் மேற்பார்வையில் மணப்பாறை துணை சூப்பிரண்டு ராமநாதன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story