தூத்துக்குடி மாவட்டத்தில் 1,854 பள்ளிக் கூடங்கள் திறப்பு


தூத்துக்குடி மாவட்டத்தில் திங்கட்கிழமை 1,854 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 1,854 பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டன. முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு வந்த மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கியும், மாலை அணிவித்தும் உற்சாகமாக வரவேற்றனர்.

பள்ளிக்கூடங்கள்

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தில் இருந்து விடுபட்டு கடந்த பிப்ரவரி மாதம் முதல் அனைத்து வகுப்புகளும் செயல்பட தொடங்கின. தொடர்ந்து வகுப்புகள் நடத்தப்பட்டு 2 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தேர்வுகளும் நடத்தப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த நிலையில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையிலான வகுப்புகள் நேற்று தொடங்கின. ஏற்கனவே பள்ளிக்கூட வகுப்பறைகள், வளாகங்கள் சுத்தம் செய்து தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தன.

திறப்பு

இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 1221 தொடக்கப்பள்ளிக்கூடங்கள், 304 நடுநிலைப்பள்ளிக்கூடங்கள், 111 உயர்நிலை பள்ளிக்கூடங்கள், 218 மேல்நிலைப்பள்ளிகள் ஆக மொத்தம் 1854 பள்ளிக்கூடங்கள் நேற்று திறக்கப்பட்டன. நேற்று காலை முதல் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கூடங்களுக்கு சென்றனர். தொடக்கப்பள்ளி மாணவர்களை, அவர்களின் பெற்றோர் பள்ளிக்கூடங்களுக்கு அழைத்து சென்றனர். அவர்களை ஆசிரியர்கள் மகிழ்வோடு வரவேற்றனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் மாணவர்களுக்கு அரசின் இலவச பாடப்புத்தகங்களும் வழங்கப்பட்டன. முதல் நாளில் மாணவர்களுக்கு நீதி போதனை வகுப்புகள் நடத்தப்பட்டன.

கோவில்பட்டி

கோவில்பட்டி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நேற்று 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 1,200 பேர் பள்ளிக்கு ஆர்வமுடன் வந்தனர். மாணவிகளை தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமையில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். மாணவிகளுக்கு கல்வி ஆண்டுக்கான புத்தகங்களை வழங்கினார்கள். மாணவிகளுடன் பெற்றோர்களும் வந்திருந்தனர். இதேபோன்று இப்பகுதியில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர்.

கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் 38 அரசுப் பள்ளிகள், 34 அரசு உதவிபெறும் பள்ளிகள், 27 மெட்ரிகுலேஷன் பள்ளிகள் உள்ளன. அனைத்து பள்ளிகளுக்கும் மாணவர்கள் ஆர்வமுடன் பள்ளிக்கு வந்ததாக மாவட்ட கல்வி அதிகாரி சின்னராஜ் கூறினார்.


Next Story