கிருஷ்ணகிரியில் ரூ.187.2 கோடி மதிப்பீட்டில் சுத்திகரிப்பு ஆலை - முதல்-அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சுத்திகரிப்பு ஆலையை ரூ. 187.20 கோடி மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
சென்னை,
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து சிப்காட் தொழிற் பூங்காக்கள் மற்றும் பிற தொழிற்சாலைகளுக்கு இரண்டு கட்டங்களாக 20 எம்.எல்.டி. கொள்ளளவு கொண்ட மூன்றாம் நிலை எதிர் சவ்வூடுபரவல் சுத்திகரிப்பு ஆலையை (TTRO Plant) ரூ. 187.20 கோடி மதிப்பீட்டில் நிறுவுவதற்கான திட்டப் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்த அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி சென்னை தலைமைச் செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து சிப்காட் நிறுவனத்தின் பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியிலிருந்து திருவண்ணாமலை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 537 பள்ளிகளுக்கு பலசெயல்பாட்டு அச்சுப்பொறிகளை (Multi Functional Printers) கொள்முதல் செய்வதற்காக பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ. 50 இலட்சத்திற்கான காசோலையினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்.