19 கிலோ கஞ்சா மாயம்: எலிகள் தின்றதாக இன்ஸ்பெக்டர் சாட்சியம்3 பெண்கள் விடுதலை
கஞ்சாவை எலிகள் கடித்து சேதப்படுத்தியதாக இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தால், கைதான 3 பெண்களை விடுதலை செய்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கைதான பெண்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவில் 19 கிலோ கஞ்சாவை எலிகள் கடித்து சேதப்படுத்தியதாக இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தால், கைதான 3 பெண்களை விடுதலை செய்து சென்னை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கடந்த 26.8.2018 அன்று கோயம்பேடு பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ரோந்து சென்றனர். அப்போது 3 பெண்கள் போலீசாரை பார்த்ததும் அங்கிருந்து நழுவிச்சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து அந்தப் பெண்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர்கள், கஞ்சாவை மறைத்துவைத்து விற்பனை செய்து வந்தது தெரிந்தது. அவர்களிடம் சோதனை செய்தபோது 30 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதையடுத்து அவர்களை கைது செய்த போலீசார், கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
கைதானவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தியபோது, பறிமுதல் செய்யப்பட்ட 30 கிலோ கஞ்சாவும் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதன்பின்பு, கோர்ட்டு உத்தரவுப்படி மீண்டும் அந்த கஞ்சா போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு சிறப்பு கோர்ட்டில் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர், 2 பெண் சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டு என 5 பேர் சாட்சியம் அளித்தனர். 15 சான்றாவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன.
பொதுவாக வழக்கு விசாரணையின்போது, குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு குறியீடு செய்யப்படுவது வழக்கம்.
அதன்படி இந்த வழக்கில் போலீசார் பறிமுதல் செய்த 30 கிலோ கஞ்சாவை குறியீடு செய்வதற்காக கோர்ட்டில் சமர்ப்பிக்க நீதிபதி உத்தரவிட்டார். அப்போது போலீசார் 11 கிலோ கஞ்சாவை மட்டுமே சமர்ப்பித்தனர்.
வழக்கு விசாரணையின்போது, கைதான பெண்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், இன்ஸ்பெக்டரிடம் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது கஞ்சா அளவு குறைந்தது குறித்து இன்ஸ்பெக்டரிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு அவர், போலீஸ் நிலைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பற்ற நிலையில் இருந்ததால் மழையால் பாதிக்கப்பட்டு, எலிகளால் கடிக்கப்பட்டு சேதமடைந்ததால் கஞ்சாவின் அளவு குறைந்ததாக தெரிவித்தார். அதைக்கேட்ட நீதிபதி அதிர்ச்சி அடைந்தார்.
குறுக்கு விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் அளித்த சாட்சியத்தை அடிப்படையாக வைத்து, கைதான பெண்கள் தரப்பில் ஆஜரான வக்கீல், பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படும் கஞ்சா, போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படும் கஞ்சா ஆகியவற்றின் அளவில் வேறுபாடு உள்ளது.
இது, போலீஸ் விசாரணையின் உண்மைத்தன்மையில் சந்தேகத்தை ஏற்படுத்தும்வகையில் உள்ளது என வாதாடினார். அதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, 'போலீசாரின் விசாரணையில் மிகுந்த சந்தேகம் உள்ளது. கைதான பெண்கள் மீதான குற்றச்சாட்டை போலீசார் நிரூபிக்கவில்லை. எனவே அவர்கள் விடுதலை செய்யப்படுகின்றனர்' என உத்தரவிட்டார்.