சர்வே எண்ணை மாற்றி நிலத்தை விற்று விவசாயியிடம் ரூ.19¼ லட்சம் மோசடி
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் எதிரே சர்வே எண்ணை மாற்றி நிலத்தை விற்று விவசாயியிடம் ரூ.19¼ லட்சம் மோசடி செய்ததாக அக்காள், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் எதிரே சர்வே எண்ணை மாற்றி நிலத்தை விற்று விவசாயியிடம் ரூ.19¼ லட்சம் மோசடி செய்ததாக அக்காள், தம்பியை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
விவசாயி
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அல்லித்துறை சரவணபுரம் பகுதியை சேர்ந்தவர் அ.வெற்றிவேல் (வயது 34). விவசாயி. இவருடைய வீட்டுக்கு திருச்சி வியாழன்மேடு பகுதியை சேர்ந்த பொன்னர் கடந்த 4 ஆண்டுகளாக பால் கொடுத்து வருகிறார். இதனால் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது.
இந்த பழக்கத்தில் வெற்றிவேலிடம், தனது அக்காள் ராஜேஸ்வரிக்கு சொந்தமான இடம் தோகைமலை சாலையில் திருச்சி வாழை ஆராய்ச்சி மையம் எதிரே விற்பனைக்கு உள்ளது. யாராவது இடம் கேட்டால் கூறுங்கள் என்று பொன்னர் கூறியுள்ளார். அந்த இடம் பிரதான சாலையில் இருந்ததாலும், ஏற்கனவே தொழில் தொடங்க வெற்றிவேல் திட்டமிட்டு இருந்ததாலும் அந்த இடத்தை அவரே வாங்க திட்டமிட்டார்.
நிலம் கிரையம்
இதுபற்றி, பொன்னரிடம் அவர் கூறிய போது, அந்த இடம் தனது அக்காள் ராஜேஸ்வரியின் கணவர் கொயிலான் என்பவருக்கு பாகப்பிரிவினை மூலம் வந்தது. வாரிசு அடிப்படையில் தனது அக்காளிடம் இருந்து பத்திரப்பதிவு செய்து கொள்ளலாம் என்று பொன்னர் கூறியுள்ளார். பாகப்பிரிவினை சொத்து என்பதால், அதை ராஜேஸ்வரியிடம் இருந்து உனது பெயருக்கு மாற்றியபின்னர், எனக்கு கிரையம் செய்து கொடு என்று வெற்றிவேல் கூறியுள்ளார்.
இதை பொன்னர் ஏற்றுக்கொள்ளவே முன்பணமாக ரூ.10 லட்சத்தை வெற்றிவேல் கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரியிடம் இருந்து பொன்னர் பெயருக்கு அந்த இடத்தை மாற்றியதாக கூறி 15-9-2022 அன்று வெற்றிவேல் மற்றும் அவருடைய தம்பி மணிகண்டன் ஆகியோரது பெயருக்கு நிலத்தை கிரையம் செய்து கொடுத்தனர். அன்றே மீதித்தொகை ரூ.9 லட்சத்து 32 ஆயிரத்தை வெற்றிவேல் அவர்களிடம் கொடுத்துள்ளார்.
ரூ.19¼ லட்சம் மோசடி
பின்னர், வெற்றிவேலிடம் காட்டி கிரையம் செய்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க வேலை ஆட்களுடன் வெற்றிவேல் சென்றுள்ளர். அப்போது, ரவிச்சந்திரன் என்பவர் அந்த இடம் தனக்கு சொந்தமானது என்றும், கடந்த 2018-ம் ஆண்டு வாணிசித்ரா என்பவரிடம் இருந்து வாங்கியதாகவும் கூறினார். விசாரித்ததில் வாணிசித்ரா அந்த இடத்தை கடந்த 2000-ம் ஆண்டு ராஜேஸ்வரியின் கணவர் கொயிலானிடம் இருந்து வாங்கியது தெரியவந்தது. இதுபற்றி விசாரித்த போது, ஏற்கனவே விற்கப்பட்ட இடத்தை காட்டி பத்திரப்பதிவு செய்யும் போது சர்வே எண்ணை மாற்றி பதிவு செய்து வெற்றிவேலிடம் பொன்னர், ராஜேஸ்வரி ஆகியோர் பண மோசடி செய்ததும், அதற்கு பொன்னரின் அண்ணன் சுரேஷ்குமார், அம்மா சரோஜா, மச்சான் பெரியசாமி ஆகியோர் உடந்தையாக இருந்ததும் தெரியவந்தது. இதையறிந்து அதிர்ச்சி அடைந்த வெற்றிவேல், தன்னிடம் மோசடி செய்து வாங்கிய ரூ.19 லட்சத்து 32 ஆயிரத்தை திருப்பி தரும்படி பொன்னரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் பிரச்சினையை முடித்துதருவதாக கூறிவிட்டு, பின்னர் கண்டுகொள்ளவில்லை.
அக்காள், தம்பி கைது
இதனால் மனமுடைந்த வெற்றிவேல், இதுபற்றி திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொன்னர், அவருடைய அக்காள் ராஜேஸ்வரி, அண்ணன் சுரேஷ்குமார், அம்மா சரோஜா, மச்சான் பெரியசாமி ஆகியோர் மீது மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ்சூப்பிரண்டு ஆல்பர்ட் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதைத்தொடர்ந்து, பொன்னர், அவருடைய அக்காள் ராஜேஸ்வரி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.