டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது


டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 July 2023 5:21 PM GMT (Updated: 11 July 2023 9:26 AM GMT)

உடுமலை அருகே டாஸ்மாக் பணியாளரை மிரட்டி பணம் பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

பணத்தை கேட்டு மிரட்டல்

உடுமலையை அடுத்த எஸ்.வி.புரத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (44). இவர் மொடக்குபட்டி- தளிக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 1-ந்தேதி இரவு 10.30 மணிக்கு ஜெய்பிரகாஷ் வேலையை முடித்துக்கொண்டு தன்னுடன் வேலை பார்க்கும் விற்பனையாளர் சரவணன் என்பவரை தனது மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு ஆனைமலை சாலை வழியாக வீட்டுக்கு சென்று கொண்டு இருந்தார்.

இவர்களது வாகனம் தளி அருகே சென்று கொண்டு இருந்தது. அப்போது இவர்களது மோட்டார்சைக்கிளுக்கு பின்னால் வந்த கார் ஜெயப்பிரகாஷ் ஓட்டிச்சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. அதில் இருவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். அந்தக்காரில் வந்த முககவசம் அணிந்த மர்ம சாமிகள் மது விற்ற பணத்தை கொடுங்கடா என்று பீர்பாட்டில் மற்றும் அரிவாளை காட்டி மிரட்டியதுடன் தக்காளி பையை எடுத்துச் சென்று வீசிவிட்டு சென்றனர். இந்த சம்பவம் உடுமலை பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது.இது குறித்து ஜெயப்பிரகாஷ் தளி போலீசில் புகார் செய்தார்.

2 வாலிபர் கைது

அதை தொடர்ந்து உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாரன் தளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா கண்ணன் தலைமையில் தனிப்படை அமைத்து உத்திரவிட்டார்.

அதை தொடர்ந்து தனிப்படை போலீசார் பல்வேறு பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டு மர்ம ஆசாமிகளை தேடி வந்தனர். இந்த சூழலில் நேற்று டாஸ்மாக் பணியாளரை மிரட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற தேனி மாவட்டம் வீரபாண்டியைச் சேர்ந்த மாரிமுத்து (வயது28) மடத்துக்குளம் தாலுகா பாப்பான் குளத்தைச்சேர்ந்த வீரமுத்து (24) ஆகியோரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து கார் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story