தர்மபுரியில்லாரியில் பேட்டரிகளை திருடிய 2 பேர் கைது
தர்மபுரி செட்டிகரை பகுதியை சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 28). லாரி டிரைவர். இவர் தர்மபுரி ரெயில் நிலையத்துக்கு வரும் பொருட்களை லாரிகளில் ஏற்றிகொண்டு சென்று வருவது வழக்கம். இவர் ரெயில் நிலையம் அருகே உள்ள லாரி நிறுத்துமிடத்தில் லாரியை நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் மீண்டும் வந்தபோது லாரியை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை. இதற்கு காரணம் என்ன? என்பது குறித்து சோதித்தபோது லாரியில் இருந்த 2 பேட்டரிகள் மயமாகி இருப்பதும், மர்ம நபர்கள் லாரியின் பேட்டரிகளை திருடி சென்றதும் தெரியவந்தது.
இதையடுத்து அருள்முருகன் மற்றும் குட்செட் சங்க நிர்வாகி அன்பு ஆகியோர் பென்னாகரம் ரோடு மற்றும் ராமாக்காள் ஏரி பகுதிகளில் விசாரித்தனர். அப்போது ராமாக்காள் ஏரிகரை அருகே 2 பேர் லாரி பேட்டரியுடன் நின்றனர். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு வந்த போலீசார் லாரி பேட்டரிகளுடன் நின்ற 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள் தர்மபுரியை சேர்ந்த மணிகண்டன் (28), வினோத்குமார் (35) என்பதும், இவர்கள் ரெயில் நிலையம் அருகே நின்ற லாரியில் 2 பேட்டரிகளை திருடியதும் தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்ததோடு, பேட்டரிகளை பறிமுதல் செய்தனர்.