தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது
நாமகிரிப்பேட்டை அருகே கடன் பிரச்சினையால் தொழிலாளியை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாமகிரிப்பேட்டை
தொழிலாளி தற்கொலை
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் சாகுல் அமீர் (வயது 41). சென்ட்ரிங் தொழிலாளி. இவருக்கு ஆஷிமிதா (33) என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக குடும்ப பிரச்சினை காரணமாக சாகுல் அமீர் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சாகுல் அமீர் நாமகிரிப்பேட்டை அருகே காக்காவேரி பகுதியில் சென்ட்ரிங் வேலைக்கு சென்றார். அப்போது அவர் வேலை செய்த கட்டிடத்தின் விட்டத்தில் கயிற்றால் அதில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விசாரணை
இதை கண்ட அங்கிருந்தவர்கள் நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் மற்றும் போலீசார் சாகுல் அமீரின் உடலை கைப்பற்றினர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வந்தனர்.
2 பேர் கைது
விசாரணையில், சாகுல் அமீர் சிலரிடம் கடன் வாங்கியதாக தெரிகிறது. இதேபோல் ராசிபுரத்தை சேர்ந்த பழனிசாமி மகன் பிரபாகரன் (24) மற்றும் பூபாலன் (31) ஆகியோரிடமும் கந்து வட்டிக்கு கடன் பெற்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்கள் சாகுல் அமீரிடம் பணம் கேட்டு தொல்லை செய்ததாக தெரிகிறது. இதனால் மனவேதனை அடைந்த சாகுல் அமீர் வேலை செய்த இடத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அப்போது தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தனது தற்கொலைக்கு காரணமானவர்கள் குறித்து அவர் வாட்ஸ்அப்பில் அவரது குடும்பத்திற்கு வீடியோ பதிவு செய்து அனுப்பி உள்ளார். அதில் அவர் பிரபாகரன், பூபாலன் பெயரை குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத்தொடர்ந்து பிரபாகரன், பூபாலன் ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.