பெண்ணின் ஆபாசப்படத்தை 'வாட்ஸ்அப்பில்' அனுப்பிய 2 பேர் கைது

எருமப்பட்டி அருகே கணவர் போலீசில் புகார் செய்த ஆத்திரத்தில் பெண்ணின் ஆபாசப்படத்தை ‘வாட்ஸ்அப்பில்’ அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
எருமப்பட்டி
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி அருகே உள்ள அலங்காநத்தம் பிரிவை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் செங்கல் சூளை நடத்தி வருகிறார். இவரது மனைவி வீரலட்சுமி. அதேபகுதியை சேர்ந்தவர்கள் மனோஜ் (28), கார்த்திக், மெய்யப்பன். இவர்கள் குமாரிடம் தகராறு ெசய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து எருமப்பட்டி போலீஸ் நிலையத்தில் குமார் கொடுத்த புகாரின்பேரில் 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த மனோஜ் ஆத்திரத்தில் குமாரின் மனைவி வீரலட்சுமியின் ஆபாசப்படத்தை, ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடி பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு அனுப்பினார். பின்னர் அவரது செல்போனில் இருந்து குமார் மற்றும் சில நண்பர்களுக்கு 'வாட்ஸ்அப்' மூலம் ஆபாசப்படத்தை அனுப்பியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த குமார், இதுகுறித்து மனோஜிடம் தட்டி கேட்டார். அப்போது அவர், தகாத வார்த்தைகளால் திட்டி குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.. இதுகுறித்து குமார் கொடுத்த புகாரின்பேரில் எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மனோஜ், பாஸ்கரன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






