அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேர் கைது
கோவை புட்டுவிக்கி சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கோவை
கோவை புட்டுவிக்கி சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஸ் கண்ணாடி உடைப்பு
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அலுவலகம் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை நடந்தது. இதற்கிடையே கடந்த 22-ந் தேதி இரவில் கோவை கணபதியில் இருந்து கோவைப்புதூர் நோக்கி செல்லும் 3டி என்ற அரசு பஸ் புட்டுவிக்கி சாலையில் உள்ள ராக்கியண்ணன் தோட்டம் பகுதி அருகே வந்து கொண்டு இருந்தது.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் திடீரென்று பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து சேதப்படுத்திவிட்டு தப்பி சென்றனர். அதுபோன்று கோவை வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட என்.எச். சாலையில் வந்து கொண்டு இருந்த மற்றொரு அரசு பஸ்சின் கண்ணாடியும் உடைத்து சேதப்படுத்தப்பட்டது.
2 பேர் கைது
இந்த 2 சம்பவங்கள் குறித்து குனியமுத்தூர், வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அத்துடன் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படையை சேர்ந்த போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
அதில் புட்டுவிக்கி சாலையில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தியது கோவை கரும்புக்கடையை சேர்ந்த முகமது ஷாரூக் (வயது 27), முகமது இத்ரீஸ் (42) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் அடைப்பு
பின்னர் போலீசார் 2 பேரையும் கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் வெரைட்டிஹால் ரோடு பகுதியில் அரசு பஸ் கண்ணாடியை உடைத்தவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.