சின்னசேலம் அருகேமூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது
சின்னசேலம் அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த 2 பேர் கைது செய்யப்பட்டனா்.
சின்னசேலம்,
சின்னசேலம் போலீசார் அம்மையகரம் ரெயில்வே கேட் அருகே நேற்று முன்தினம் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதையடுத்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில், சின்னசேலம் அடுத்த நயினார்பாளையம் இளங்கோ தெருவை சேர்ந்தவர் நாராயணன் மகன் சின்னான் என்கிற சின்னையன் (வயது 42), பூண்டி கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் சின்னதுரை (30) என்பது தெரியவந்தது. சின்னதுரை உதவியோடு, பூண்டி கிராமத்தில் உள்ள நல்லம்மாள் (65) என்பவரது வீட்டில், வீட்டின் பூட்டை உடைத்து , ஒரு லட்சம் ரூபாய், 1 பவுன் நகை ஆகியவற்றை சின்னான் கொள்ளையடித்தது தெரியவந்தது.
இதையடுத்து, சின்னான், சின்னதுரை ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்து ரூ, 21 ஆயிரத்து 500 பணமும், 4 கிராம் 800 மில்லி எடையுள்ள பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சின்னான் மீது 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.